பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அனைவரும் ஆற்றாது அரற்றிய காதை 203


துறந்துவிட் டனனோ? தூதூ இல்லை.
என்மகற் கிறப்போ இப்போழ் தில்லை

25 என்மகற் ககவை இருநூ றாகும்.
கண்மணி படுத்துக் கண்ணுறங் குகின்றான்;
உண்மை யிஃதே! உறங்கி விழித்தபின்
என்னைக் காண்பான் என்னொடு பேசுவான்
என்னைத் தழுவுவான் இன்முத் தீவான்.

30 எழுந்திரு மகனே இன்னுமா உறக்கம்?
கழிந்தது பொழுது கடிமனை செல்வோம்.
அடுத்து வரைந்த அரிய நூலினை
முடித்திட வேண்டுமே! முன்னம் புறப்படு.
படுத்தே யிருப்பது பழுதாம் உடற்கே.

35 இதோ கண்களில் ஈக்கள் மொய்த்திடும்
இதோ செவிகளை எறும்புகள் கடித்திடும்
கண்வலிக் காதோ? காதுநோ காதோ?
அன்னையான் இன்னே அவற்றை அகற்றுவேன்;
கையை நீட்டுக காலை உயர்த்துக;

40 பைய எழுந்து பார்க்க என்னை.
ஐயோ கண்மணி அப்படியே கிடக்கிறான்.
மெய்யோ காண்பதென் மெய்யது நடுங்குமால்;
பொய்யோ ஒருகால்; புரிய வில்லையே!
கொய்ய உயிரைக் கொல்லும் ஒறுப்பு

45 வஞ்ச மன்னன் வழங்கினான் என்பதை
நெஞ்சமிப் போதே நினைக்கத் தொடங்குமால்.
மாண்டவென் மகனே மாண்டனை யோ நீ
ஈண்டினி எனக்கே என்ன வேலை?
நினது பேரிடத்தை நிரப்புவோர் யாரோ?



25. என்மகற்கு அகவை - என் மகனுக்கு வயது. 29. இன்முத்து - இனிய முத்தம். 32. அடுத்து வரைந்த தொடர்ந்து எழுதிய.38. இன்னே - இப்போதே. 40. பார்க்க - பார்ப்பாயாக. 47. மாண்ட என் மகனே - மாட்சிமை (சிறப்பு) உடைய என் மகனே; மாண்டனையோ - இறந்தனையோ.