பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அனைவரும் ஆற்றாது அரற்றிய காதை 205


மீதே சென்று மேன்மை யுறவே
அங்குளோர் ஆர அருந்தி மகிழப்
70 பொங்கு தமிழ்த்தேன் பொழிகின் றனையோ?
தமிழின் வளர்ச்சியைத் தடைசெயுங் கடையரும்
தமிழ்கற் றோரைத் தாழ்த்தும் மடையரும்
இங்குள் ளமையை இம்மியும் பொறாஅமே
அங்குசென் றனையோ? அறியேன் மகனே! அல்லது,

75 "வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழிய வே!
வானம் அளந்தது அனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழிய வே!
ஏழ்கடல் வைப்பினும் தன்மணம் வீசி

80 இசைகொண்டு வாழிய வே!
வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழி யே!
வானம் அறிந்தது அனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே!"

85 என்றெலாம் பின்வரும் புலவர்கள் இசைக்கலாம்;
நன்றவர் மொழியென நானிலம் நம்ப
இன்றே வானில் இன்றமிழ் பரப்பச்
சென்றஃ தளக்கச் செய்கின் றனையோ!
உம்பர் இருந்து நீ உயர்தமிழ் வளர்த்திடு

90 இம்பர் இருந்தியான் இன்றமிழ் வளர்ப்பேன்; நிற்க,
புலிபசித் திடினே புல்தின் னாமே
வலியுறு களிற்றையே வவ்வ முயலும்;
பன்னலக் கன்னியர் பல்லோர் இருக்க
மன்னன் மகளையே மணக்க விரும்பினை!


69. ஆர - நிறைய. 75-84. சுப்பிரமணிய பாரதியார் பாடல்: இவ்வாறு பின்வருவோர் பாடலாமென முன் கூட்டியே கம்பர் கற்பனை செய்துள்ளதாகக் கற்பனை செய்யப்பட்டுள்ளது 88. சென்றஃது சென்று அஃது - சென்று அத்தமிழ்மொழி. 92. களிறு - யானை. 93. பன்னலம் - பல நன்மைகள், பல சிறப்புக்கள்.