பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30. அமராவதி மணந்த அருமைக் காதை

வேந்தன் தன்னுறு தேவிபால் விளம்புவான்:
மாந்தர் நந்தம் மகளைப் பற்றி
ஒழுக்க மிலாளென உணரு முன்னர்
இழுக்கம் வராமே இனிய திருமணம்

5 சிம்மன் றனக்குச் செய்து கொடுப்போம்;
சிம்மன் அமருவைத் திருமணங் கொள்ளக்
கருதுவ துண்மை காடவனும் ஒப்புவான்;
தருதிநின் ஒப்புதல் தகவா யென்ன,

(சோழமா தேவி)



நம்மகன் கிள்ளி நமனுல கெய்தினன்
10 விம்மி நாம் வருந்துமிவ் வேளை தன்னில்
மகளது மணமோ மகிழ்ச்சிக் குரியதா?
துகளது நம்பால் தோன்றுவ துறுதி;
சின்னாள் சென்றபின் செய்யலாம் திருமணம்
என்னவே தேவி எடுத்து மொழிய,

(சோழன்)



15 மகனை யிழந்த மாத்துயர் மறக்கவே
மகளின் திருமணம் மாணத் தொடங்குவல்.
இப்போது சொல்லுன் இதயக் கருத்தைத்
தப்பாது கேட்பல் என்றவன் சாற்ற,


1.தேவி - மனைவியாகிய சோழ மாதேவி. 4. இழுக்கம் - இழிவு. 6. அமரு - அமராவதி 12. துகள் அது ; துகள் - குற்றம்; அது - பகுதிப் பொருள் விகுதி. 16.மாண - சிறப்புற. 18. கேட்பல் - கேட்பேன் ; என்றவன் - என்று அவன்; சாற்ற - சொல்ல.