பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமராவதி மணந்த அருமைக் காதை 215


அரண்மனை முன்னரும் அருநகர் மறுகிலும்
மன்றங் களிலும் மாடங் களிலும்

75 பழமணல் நீக்கிப் புதுமணல் பரப்பினர்.
மங்கலக் குடங்கள் மணிபொதி விளக்குகள்
எங்கணும் காண இலங்கின பொலிவொடு.
வண்ண ஓவியம் வகைவகைச் சிலைகள்
விண்ணுலகை மிஞ்சும் விதத்தில் விளங்கின.

80 வாயில் களிலுள வளைவில் ஆன்றோர்
வாய்மொழி பற்பல வரையப்பட் டிருந்தன.
மங்கல இயங்களின் மாப்பே ரொலிகள்
எங்கணுங் கேட்க இசைக்கப் பெற்றன.
பொங்கும் மங்கலம் எங்கும் பொலிந்தது.

85 திருக்கோ யில்கள் திருவிழாக் கொண்டன
கல்விக் கூடங்கள் கலைவிழா நடத்தின
அறிஞர் மன்றங்கள் ஆய்வுரை வழங்கின
வறிஞர்க் குணவு வழங்கப் பட்டது.
சிறையுளோர் விடுதலை செய்யப் பட்டனர்

90 மறைவல் லோர்திரு முறைகள் ஓதினர்
கலைவல் லோர்பல் கலைவிருந் தளித்தனர்
அலையலையாய் மக்கள் அயலூர் களினின்று
தலைநகர்க்கு வந்து தங்க லாயினர்.
மைந்தரும் மகளிரும் மகிழ்ந்து சுற்றினர்;

95 மைந்துடை மாந்தர் மாவிளை யாட்டுகள்
மகிழ்வொடு நடத்தினர்; மக்கள் அனைவரும்
புகழுறு வண்ண உடையொடு பொலிந்தனர்.
ஒன்பான் மணிகளால் ஒளிபெறக் குயிற்றிய
இன்ப அணிகளை ஏற்பப் பூண்டு

100 மங்கையர் பலரும் மகிழ்ச்சியில் திளைத்தனர்.



73. மறுகு - தெரு. 76. பொதி - பதித்த. 82.இயங்கள் - வாத்தியங்கள். 95. மைந்துடை மாந்தர் - வலிமையுடைய விளையாட்டு வீரர்கள். 98. ஒன்பான் மணிகள் - நவ ரத்தினங்கள்; குயிற்றிய-செய்த.