பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

220 அம்பிகாபதி காதல் காப்பியம்

அடங்கா முலைகளை அடங்கச் செய்ய
இடங்கொள் கச்சினை இறுக்கிக் கட்டினர்;
பூட்டுமேல் பூட்டு பூட்டுதல் போலப்

195 பூட்டிய கச்சுமேல் பூட்டினர் கஞ்சுகம்;
பட்டாம் பூச்சிபோல் பளபளத்து மின்னும்
பட்டில் பொன்னிழை பதித்துக் கொடிமலர்
வண்ணம் பலவகை வாய்ந்த புடவையை
நண்ணுள் ளாடைமேல் நயப்பா யுடுத்தினர்;

200 தலையையும் உடலையும் தக்க பாலமாய்
இணைக்குங் கழுத்தினை ஏமாற்ற வியலுமோ?
கழுத்தில் அட்டிகை கவின்பெற அணிந்தனர்;
மார்பிலும் மாலைக்கு மட்டே யில்லை;
"கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்

205 இல்லாதாள் பெண்காமுற் றற்று'என் பதுகுறள் ;
பெண்ணுக்கு எடுப்பினைப் பேணித் தந்திடும்
வண்ண முலைமேல் வகைவகை யான
மணிமா லைகளொடு மலர்மா லைகளும்
அணிபெற அமைத்தே அகமிக மகிழ்ந்தனர்;

210 இல்லையோ உண்டோ இடையெனும் ஐயம்
இல்லையா மாறே இடுப்பில் மேகலையாம்
ஒட்டி யாணம் ஒட்டப் பூட்டினர்;
அப்போ தங்கே அருகில் நின்ற
இடுப்பில் மடிப்பு விழுந்த ஒருத்தியைக்

215 காட்டி யிவட்கு மேகலை கட்ட


192. அடங்காமுலை-சட்டைக்குள் அடங்காத முலை; அடங்கச் செய்தல் - கச்சால் கட்டி அடங்கச்செய்தல்; திமிரை அடங்கச் செய்தல் என்னும் குறிப்பும் காண்க. 93. கச்சு - முலையைக் கட்டும் உள் சட்டை. 195.கஞ்சுகம் - கச்சுமேல் அணியும் மேல் சட்டை. 199.கண்ணுள்ளாடை - நண் உள் ஆடை - பொருந்திய உள் பாவாடை - பாெருந்திய உள்பாவாடை 203. மட்டு - அளவு. எடுப்பு - எடுப்பான தோற்றப் பொலிவு. 210. இடை - இடுப்பு. 212.ஒட்டியாணம்- இடுப்பு அணி.