பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

222 அம்பிகாபதி காதல் காப்பியம்


240 அமைவாய்க் கூந்தலில் அடர்மலர் செருகினர்;
இன்னும் எல்லாம் இனிது முடித்துக்
கன்னம் தடவிக் கண்ணேறு முரித்தனர்.
திருமண மகிழ்ச்சியால் திருமகள் உடம்பு
பெருமளவு பருத்துப் பெரியதாய் விட்டதால்

245 அணிகள் இறுக்கம் ஆயின என்று
துணிவுடன் ஒருத்தி சொல்ல, தோழியர்
நனிமிக நகைக்க, நாணங் கொண்ட
மணமகள் உதட்டில் மலர்ந்தது புன்னகை.
அணிகள் யாவும் அமரா வதிக்கு நல்

250 லணிசெய் திலவே; அவளை அடைந்ததால்
அணிகளே முற்றும் அணிபெற் றனவே!
மேனி மினுங்க மேளதா ளத்தொடு
மானேர் விழியர் மங்கையர் பல்லோர்
அமரா வதிதனக் கழகாய் நலங்கிடும்

255 மரபினைத் தொடங்கி மகிழ்ந்து நடத்தினர்.
நலங்கிடும் போது நங்கை யொருத்தி
இலங்கிடு மணமகளை இன்புடன் நோக்கி,
பல்லாண்டு காலம் பாரில் வாழ்க!
நில்லா உலகில் நின்பெயர் நிற்க!

260 உன்றன் இல்வாழ்க்கை உயர்வு பெறுக!
என்று வாழ்த்த, இன்னொரு மங்கை,
நில்லா உலகில் பெயர்நிற்க என்பது
உயிர்நில்லா வீடினும் உன்பெயர் நிலைக்கும்
என்று பொருள்படும், இதுநன் றில்லை;


240. அடர் மலர் பூக்கற்றை. 242. கண்ணேறு - கண் திருஷ்டி; கண்ணேறு முரித்தல் - வயதான ஒருத்தி தன் இரு கைகளால் அமராவதியின் இரு கன்னங்களையும் தடவி, அந்தக் கைகளைத் தன் இரு கன்னங்களிலும், மடித்து வைத்து, ஒலி உண்டாகுமாறு விரல்களை இரட்டை முரித்தல்; இவ்வாறு செய்தால் கண்ணேறு கழியுமாம். 243. திருமகள் - அமராவதி. 251. அணி பெற்றன - அழகு பெற்றன, 253.மானேர் - மான் நேர் - மான்விழியை ஓத்த. 257. இலங்கிடு- அழகு விளங்குகின்ற, 239. நில்லா உலகு - நிலையில்லாத உலகம்.