பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமராவதி மணந்த அருமைக் காதை 222

265 'இல் வாழ்க்கை' என்பது 'இல்லா வாழ்க்கை'
என்னும் பொருளையும் ஈயு மாதலின்
இன்னும் இவ்வா றியம்பா தேயெனச்
சொன்னபின் ஆமெனச் சொற்றனர் மற்றவர்;
முன்னிய செயலெலாம் முடித்தபின், ஒருத்தி,

270 கடிமணம் ஆனபின் காதலற் சேர்வாய்
அடிமையாம் எமையினி அறவே பிரிவாய்;
மணமகன் பெற்ற மாதவம் எமக்கிலை
எனக்கூ றியதை ஏற்கா தவள்போல்
அமரா வதிதலை யசைக்க, அனைவரும்

275 உண்டி கொண்டே உறங்கப் போயினர்.
பெண்டிர் அகன்றபின் பேதுற் றமராவதி
கள்ளக் காப்பறை புக்குக் கதவினை
மெள்ளக் காப்பிட்டு, மேனியில் பூட்டிய
ஒள்ளிய பூணெலாம் உதறி எறிந்தாள்.

280 அம்பிகாபதி கொலையுண் டழிந்த பின்னர்
அமராவதி கோயிலின் அகலலாம் என்றே
மன்னர் ஐயம் மனத்துள் கொண்டு
கன்னி மாடக் காவலை முடுக்கிட
இரியும் காலம் எதிர்பார்த் திருக்கையில்

285. வரையும் செய்தி வரவே மணக்க
இசையின் ஐயம் இராமே யாவரும்
அசைவின்றி வேலையில் ஆழ்வர் அஞ்ஞான்று


207. இன்னும் இனியும், இனி மேலும். 298. சொற்றனர் சொன்னார்கள். 209. முன்னிய செயலெலாம் - செய்யக் கருதிய சடங்குகள் யாவும்.270. காதலற் - காதலன் - காதலனை,கணவனை 271. அறவே பிரிவாய் - நாளையிலிருந்து முற்றும் பிரிந்து விடுவாய். 275. உண்டி - உணவு. 276. பேதுற்று - மதி மயங்கி. 278 காப்பு இட்டு - தாழ்ப்பாள் போட்டு. 279. ஒன்னிய - ஒளி வீசுகின்ற; பூண் எலாம் -அணிகள் எல்லாவற்றையும். 281. கோயிலின் அரண்மனையினின்றும். 284. இரியும் காலம் - பிரித்து ஓடும் காலத்தை. 285. வரையும் செய்தி - திருமணச் செய்தி; வரைகல் - மணத்தல் 287. அசைவு இன்றி - சோர்வு இல்லாமல்; வேலையில் - திருமண வேலையில்.