பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

அம்பிகாபதி காதல் காப்பியம்

பூவிரி மணஞ்சால் பொழில்கள் கரையெலாம்;
கோங்கம் மருதம் குரவம் கடம்பு

105. வேங்கை வாதுமை விளாபலா தெங்குமா
குருந்தம் இலவம் கொன்றை வகுளம்
நரந்தம் பாதிரி நாகம் தில்லைவேய்
நாவல் வன்னி நறுங்கொய்யா மாதுளை
பூவர சத்தி புன்னை கூவிளம்

110 ஆரம் ஆத்தி அரசால் ஆற்றின்
ஒரம் விண்ணுற ஓங்கித் தோன்றுமால்;
கரும்பு வயலெனக் கருதும் நெல்வயல்
விரும்புங் கமுகென விளங்குங் கரும்பு
தெங்கின் வடிவமாய்த் தெரியுங் கமுகு

115 தொங்கும் குலைகள் துன்னிய வாழை
வெற்றிலை அகத்தி விரவிய தோட்டம்
வெற்றிடம் இலையென விரிந்த கழனி,
நெல்லின் களையாய் நிற்பன வயலில்
அல்லி தாமரை ஆம்பல் குவளை,

120 உகுத்த மலரொடு உழவர் கட்டியே
அகத்திக் கீரையால் அடைக்கும் நீர்மடை,
இன்ன பல்வளம் இணைசோ ணாட்டின்
மன்னிய தலைநகர், வடபுல வெற்றியால்
கங்கை கொண்ட சோழ புரமென

125 எங்கும் போய இசைமிகப் பெற்றது;
இங்கதன் புகழை இயம்பல் ஒண்னுமோ!

103. பொழில் - சோலை. 104 - 110. மர வகைகள். 105. தெங்கு - தென்னை. 106. வகுளம் - மகிழ மரம். 107. நரந்தம் - நாரத்தை; வேய் - மூங்கில். 109. கூவிளம் - வில்வம். 118. கமுகு - பாக்கு மரம். 123. சணாடு - சோழ நாடு. 138. வடபுலம் - வடநாடு. 126. இயம்புதல் - கூறுதல்; ஒண்ணுமோ - முடியுமோ.