பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3. அரசன் அம்பிகாபதியை அழைத்த காதை

(ஞாயிறு தோற்றம்)

திருவுடை வியனகர்த் தெருக்களின் காவலில்
ஒருவர் மாறமற் றொருவர் வருகைபோல்
மதியம் மறைய, மறுநாள் விடியலில்
சிதைய அமைதி செறிந்திடும் ஒலிகளாம்

5 பழவகை தேடப் பறக்கும் புள்ளொலி,
உழவர் ஏர்கொடு உழப்பும் ஓதை,
பாடம் படிக்கும் பள்ளிச் சிறாரொலி,
மாடம் கோலஞ்செய் மங்கையர் எழுப்பொலி,
காரா வின்பால் கறப்பொலி இன்ன

10 ஆரா ஒலியிடை அலர்கதிர் ஞாயிறு
பாரோர் உவக்கப் பரவையிற் றோன்றினன்.

(மன்னன் நடவடிக்கை)

கம்பர் மகனைக் கடிதின் கொணர்திர்
என்றே ஆட்களை ஏவியனுப்பி
அரசன் சினமொடு அரியணை அமர்ந்தனன்.

15 அரச ஆணையை அறிந்த கம்பர்
மகனை அழைப்பதின் மாயம் என்னவோ!
புகழுறு மகன்றன் புலமையை மெச்சி
விருது வழங்க விரும்பினன் கொல்லோ!
பெரிதாம் பட்டம் பெறச்செய் வானோ

20 என்றுதம் மனையிடம் இனிக்கப் பேசி


5. புள் - பறவை. 7. அக் காலத்தில் வைகறையிலேயே மாணாக்கர் ஆசிரியரின் வீட்டிற்குச் சென்று படிப்பது வழக்கம், 8. மாடம் - வீடு. 11. பரவை - கடல். 13. கடிதின் - விரைவில்; கொணர்தி . கொண்டு வருக. 18. விரும்பினன் கொல்லோ - விரும்பினான் போலும். 20. மனை - மனைவி.