பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

அம்பிகாபதி காதல் காப்பியம்

குற்றம் ஒப்புதி கொலைக்களம் செல்லுதி
மற்றுநின் செயற்கு மாற்று வேறிலை
மற்றவர் மகளை மதிமிக மயங்கிப்
பற்றுவோர்க் கிஃதொரு படிப்பினை யாமென

50 இறையவன் முழக்கிய இடியொலி கேட்டே
அறைகுவன் மாற்றம் அம்பிகா பதிதான்;

(அம்பிகாபதியின் பதில்)

வாழ்க மன்னவ வளர்கநும் பேரருள்!
தாழ்கிறேன் தலைநும் தாள்களில் அடியேன்;
வெண்ணிலா வீசிய வேளை வீதியில்

55 எண்ணினேன் இயற்கையின் எழிலைப் பற்றி
'நிலா.நிலா ஒடிவா நில்லாமல் ஓடிவா'
என்று நிலாவை அழைப்ப தியற்கையே
அன்ரறோ ஆண்டவா! அவ்வா றடியேன்
நிலவே நிலவே நீகீழ் இறங்கி

60 வருகை தருகென வாய்விட் டழைத்தேன்
இருகை கூப்புவேன் இதில்பிழை யாதென,

(சோழன் வினவல்)

‘குலவும் தாரகைக் குழுவிடை மின்னும்
நிலவே நிலவே’ என்று நீ விளித்தனை
அமைச்சர் மகள்பெயர் தாரகை யாகும்

65 இமையாம் தாரகை, என் மகள் கண்ணும்;
எனவே,
தாரகை தன்னெடு தங்கிநின் றிருந்த
காரிகை அமரா வதியைக் கருதியே


50. இறையவன் - அரசன். 53. தாள் - கால். 58. ஆண்டவன் - அரசன். 63. விளித்தனை - அழைத்தாய். 65. இமை - கண். 67. காரிகை - பெண்.