பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

அம்பிகாபதி காதல் காப்பியம்

(அம்பிகாபதியின் அடுத்த பதில்)

தண்டமிழ் நூல்களுள் பிள்ளைத் தமிழெனும்
95 ஒண்டமிழ் நூலொன் றுளதைநீர் அறிவீர்
அம்புலிப் பருவமொன் றதனில் உண்டாம்
அம்புலி வருகவென் றதனை அழைப்பர்
அம்புலி வராதெனின் அதனை ஒறுப்பதாய்ப்
பைந்தமிழ்ப் புலவோர் பாடுதல் இயற்கை
100 நந்தம் முயற்சியால் நண்ணுதல் அரிதெனில்
ஒறுப்ப தெவ்வா றொல்லும்? எனவே,
ஒறுப்பதாய்க் கூறல் ஒருவிளை யாட்டே
அப்படி யேயான் அதனை அடைவதாய்ச்
செப்பிய தும்மொரு சிறுவிளையாட்டே
105 சென்று திங்களைச் சேர்திறன் இன்றிலை
என்றோ வரலாம் யாரறி வாரிதை!
இப்புவி புரக்கும் ஏந்தலே என்பால்
தப்புக் கணக்குப் போடுதல் தகுமோ ?
வணக்கம் கொற்றவ! வளர்க நும் செங்கோல்!
110 இணக்கமா யெனக்கு நல்விடை ஈகென,

(அரசன் அம்பிகாபதியை அனுப்புதல்)

சோழன் நோக்கினான் சொல்லுதல் அறியான்
ஏழமை கொண்ட இளஞ்சிறு புலவன்
வேழம் வேங்கையை வென்றது மான
என்னைப் பேச்சால் ஏய்த்து வென்றனன்
115 பின்னர் யானும் பேசவொன் றிலையென
மன்னவன் மனமது மறுகி
இன்னே செல்லுதி என்றனுப் பினனே.

98. ஒறுத்தல் - தண்டித்தல். 104. செப்புதல் - சொல்லுதல். 107. ஏந்தல்-உயர்ந்த ஆடவர் (அரசர்). 109. கொற்றவன் - அரசன். 113. வேழம் - யானை. வேங்கை - புலி. 116. மறுகி - மயங்கி. 117. இன்னே - இப்பொழுதே.