பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



4. கம்பர் மகனைக் கடிந்த காதை

கம்பர் தம்மனைக் கற்பகத் தாச்சிபால்
அம்பிகா பதிதனக் கரசன் செயத்தகும்
சிறப்பு குறித்துச் செப்ப இருவரும்
இறப்ப மகிழ்வுற் றிருந்த வேளை,

5 கண்போல் வளர்த்ததம் காதலற் பற்றியோர்
நண்பர் வந்து நடந்தது கூறினர்.
கேட்ட கம்பர் கிளர்ந்து மகனை
வாட்டவே மன்னன் வம்பு செய்துளான்
அம்பி காபதி அப்பழுக் கிலாதவன்

10 நம்பலாம் அவன்பால் நவையே யிராது
காலம் வருங்கால் கண்ணஞ் சாமே
காலனும் சோழனைக் கடிந்தே தீர்வல்
என்றே சினங்கொண் டிருக்கச் சோழனை
வென்ற மகனும் வீடுவந் தனனால்.

15 நடந்ததை விடாஅமே நவிலுக என்றே
அடைந்த மகனை அப்பா வினவினார்.
அம்பி காபதி அனைத்துங் கூறக்
கம்பர் சோர்ந்து காதல் மகனே
வம்பு செய்து வந்துள தறிந்து

20 வெம்பி யவற்கு விளம்ப லுற்ருர்:
கொற்றவன் தன்னிடம் குறும்பாய்ப் பேசி
வெற்றி பெற்றனை வியந்தனன் நின்றிறன்;
ஆயினுங் குடிமகன் அரசன் மகளைத்
தாயினும் சிறப்பாய்ப் போற்றலே தகுமென,

4. இறப்ப - மிகவும். 5. காதலன் - மகன். 7. கிளர்ந்து - உணர்ச்சி யெழுந்து. 10. நவை - குற்றம். 11. கண்ணஞ்சுதல் - அஞ்சுதல். 12. காலன் - எமன். 15. நவிலுதல் - சொல்லுதல்.