பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



காப்பிய ஆசிரியரின் கருத்துரை

இரட்டைக் காப்பியங்கள்:

இரட்டைக் காப்பியங்கள் எனப்படும் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் தமிழ்க் காப்பியங்கட்குள் மிகவும் சிறந்தனவாகப் போற்றப்பெறுகின்றன. நூற் கதையினைத் தொகுத்துக் கூறும் ‘பதிகம்’ என்னும் பகுதியும் முப்பது காதைகளும் இவற்றில் உள்ளன; நூல் நடை, அக்காலத்துக்கேற்ப ஓரளவு கடினமாக உள்ளது. மணிமேகலை ஆசிரியப்பாவால் ஆனது; சிலம்பில் ஆசிரியத்தினிடையே வேறினப்பாக்களும் உரைநடையும் விரவியுள்ளன. இந்த இரட்டைக் காப்பியங்களில், நம்பத்தகாத—தணிக்கை (Censor) செய்யவேண்டிய—பல செய்திகள் உள்ளன; சமயம் பரப்பும் நோக்கம் இதற்குக் காரணமாயிருக்கலாம். எப்படியோ, இவை சாலவும் பாராட்டப்பெறுகின்றன.

கான மயிலாட:

கான மயில் ஆடியதைக் கண்ட வான்கோழி தானும் ஆடியதைப்போல், யானும் ‘அம்பிகாபதி காதல் காப்பியம்’ என்னும் இந்த நூலை எழுதலானேன். இதிலும், பதிகம்—வாழ்த்துப் பகுதி—முப்பது காதைகள் ஆகியவை முறையே உள.

கதைச் சீர்திருத்தம்:

பல் நூல்களில் உள்ள கதைப் பகுதிகள் நம்பத்தக்கனவாயில்லை; செவிவழிச் செய்தியைத் தவிரத் தக்க சான்றில்லை. அம்பிகாபதி வரலாறும் இதற்கு விதிவிலக்கு அன்று. எனவே, அம்பிகாபதி வரலாற்றில் போதிய சீர்திருத்தம் செய்து, ஓரளவேனும் பகுத்தறிவுக்குப் பொருந்த யான் நூலினை யாத்துள்ளேன்.