பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



தாரகை அமராவதியொடு சூழ்ந்த காதை

51

(அமராவதி கூறல்)

அம்பி காபதி அயலவர் பெண்ணை
வம்புக் கிழுத்த வஞ்சக னல்லனோ?

25 அவனையிங் கழைப்பதை அறியின் எந்தை
அவனொடு நம்மையும் அவ்வுல கனுப்புவார்.
குறும்பு செய்த கொடியவன் அவனையான்
விரும்புதல் செய்யேன் வெறுக்கின் றேனென,

(தாரகை)

ஆடவர் சிறந்தவோர் அழகியைக் காணின்

30 பேடியரல்லரோ பெறமுய லாவிடின் ?
தங்கச் சிலையாம் தலைவியே உன்றனைத்
தங்கச் செய்தார் தமதுளந் தனிலே.
நின்னை நெஞ்சில் நிறுவிய ஒருவரைக்
கொன்னே பழித்தலே குறும்பு செய்தலாம்.

35 அவரை மணக்க அழைக்க வேண்டா;
அவரது புலமையை அருந்த அழைப்போம்.
“நவிறொறும் நூல்நயம் போலும் பயிறொறும்
பண்புடை யாளர் தொடர்பு”என் பதுகுறள்.
அம்பிகா பதியை அழைத்துரை யாடின்

40 இம்பர் இருபே ரின்பமும் எய்தலாம்.
கோவை பாடிய கூர்மதிப் புலவரை
பாவை நீ யழைத்துப் பாராட்ட வேண்டுமால்.
நுந்தை யவரை நுடங்கச் செய்தார்;
எந்தையோ அவரை ஏத்துதல் செய்வர்.

45 மன்னர் செய்த மாணாப் பிழைக்கு
நன்னர் மாற்று நாம்செயல் கடனென,

36. அவ் வுலகு - மேலுலகம். 34. கொன்னே - வீணே. 40. இம்பர் - இவ் வுலகம்; இரு பேரின்பம் - இம்மை யின்பமும் மறுமை யின்பமும் 43. வேண்டுமால் - ஆல் - ஆசை. 43. நுந்தை - உம் தந்தை; நுடங்குதல் - துவளல், வருந்தல், 44. ஏத்துதல் - போற்றுதல், 45. மாணா - சிறப்பில்லாத.