பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



தாரகை அமராவதியொடு சூழ்ந்த காதை

53

70 அந்தமிழ்ப் புலவோர் பெருமை யனைத்தும்
நந்தம் நாவால் நவிலவொண் ணாதே!
ஆதலின் புலவர் அம்பிகா பதியைக்
காதலோ டழைத்துக் கனிந்துரை யாடின்
மன்னர் பிழைக்கு மாற்று மருந்தாம்

76 என்னவே தாரகை இயம்ப, அமராவதி
ஆழ எண்ணினள் அம்பிகா பதியைத்
தோழமை கொள்ளத் துவங்கினள் நெஞ்சில்.

(அமராவதி கூறல்)

எவரும் அறியா இடந்தனில் இரவில்
அவர்வரு கைதர ஆவன செய்குவம்.

80 மன்னரும் அணுகா மறைவிடம் உடுத்தும்
கன்னி மாடக் கள்ளக்காப் பறையே.
பின்னர்ப் பேசுவம் பெதும்பைநீ உறங்கெனக்
கொற்றவன் பாவை கூறிடத் தாரகை
வெற்றி யுயிர்ப்பு விட்டனள் பெரிதே!

85 கரைப்பார் கரைப்பின் கல்லுங் கரையுமென்
றுரைப்பதோர் வகையில் உண்மை போலுமே!

73. காதல் - அன்பு. 83. பெதும்பை - பெண். 84. உயிர்ப்பு - மூச்சு.