பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

அம்பிகாபதி காதல் காப்பியம்

அமராவதியே அவ்வுரு வென்று
நினைந்து காவிடை நின்றனன் சிலைபோல்.

105 குனிந்த தலையொடு குறுகிற் றவ்வுரு.
அமராவதியென் றழைத்தனன் மெல்ல;
அம்பிகா பதியென் றழைத்தவவ் வுருவம்
அவனைக் கட்டி யணைத்துக் கொண்டது.
அவனெதிர் பாரா ததிர்ச்சி யுற்றனன்.
 
110 நங்கையர் நாணம் நனிமிக உடைமையில்
இங்ஙணம் முதலில் தழுவல் இயல்பிலை
எங்ஙணம் இப்பெண் என்னைத் தழுவினள்
என்ப தறியேன்; இவளது செய்கை
மன்பதை யுலகின் மாரு யுளதென

115 எண்ணிமுக் காட்டை எடுத்தனன் மெல்ல;
கண்ணி தாரகை நிற்கக் கண்டனன்.
சீய வேட்டையில் சிறுநரி சிக்கவே
காயுமம் பிகாபதி கனன்று கடிவான்:
அமராவதி பெயரால் அழைப்பு விடுத்து
 
120 நமன்போல் இங்ங்ணம் நடந்து கொண்டனை
தரமினீ தாரகை யல்லையோ? இன்னொரு
தரமிவ் வாறு தவறுசெய் யற்க.
நரிமா வலையில் அரிமா விழுமா?
கயலுறுந் தூண்டிலில் களிறு சிக்குமா?
 
125 தாரகை கண்ணியில் தடுக்கி விழேனியான்;
அரசிளங் குமரி அமரா வதியையே
முரசு முழங்கயான் முடிப்பேன் திருமணம்;
ஒல்லை யிவணின் றோடிடு மாயக்
கள்ளி யினியென் கண்ணில் படற்க;

130 நல்லதன் றிதுவென நனிகடிந் துரைத்தான்.
கன்னி தாரகை கனிவொடு மொழிவாள்:

114. மன்பதை - மக்கள் சமூகம். 117. சீயம் - சிங்கம். 118. கனன்று - சினந்து. 131. தர மினீ - தரம் இல்லாத நீ. 134. களிறு - ஆண்யானை.