பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அம்பிகாபதிக்கு மடல் வந்த காதை

52

பொன்னிற் சிறந்த புலவ ரேறே
என்னைக் கைவிடா தேற்க வேண்டுவல்
தானாவருந் திருவைத் தாளால் உதைப்பதா?

135 மானாம் அமராவதி மன்னன் மகளாம்
கானலை நீரெனக் கருதுதல் அறிவோ?
எட்டாக் கனிக்குக் கொட்டாவி விடுவதா?
திட்டமா யுமக்குத் தெரிவிப் பலியான்
அரச குமரி அறவே நும்மைப்

140 பரச லின்றிப் பழிப்ப தறியீர்!
“அம்பி காபதி அயலவர் பெண்ணிடம்
வம்பு செய்யும் வஞ்சஓ நாயாம்;
குறும்பு செய்த கொடியவன் அவனை
விரும்புதல் செய்யேன் வெறுப்ப லியானென”

145 அமராவதி என்னிடம் அறிவித்த துண்மை.
அரும்பெரும் புலவர் அம்பிகா பதியை
விரும்பா விடினும், அவர்தம் வியன்றமிழ்
அறிவைச் சுவைக்க அழைத்தல் கடனென
அடியேன் பரிந்துரைத் தவளைத் திருத்தினேன்;

150 துடியிடை யவளுமைத் தொலைக்கும் மறலியாம்;
எனவே என்னை ஏற்பீர் என்றுதீ
வினை போல் தாளில் வீழ்ந்தனள் பற்றியே.
அஞ்ஞான் றங்கணோர் அரிவை வந்தனள்
செஞ்ஞா யிறுமுன் செந்தா மரைபோல்

155 அம்பிகா பதிமுன் அகமிக மலர்ந்து
நம்பியே வணக்கம் நல்வர வென்றபின்,
தண்டிங் கள்முன் தாமரை மானக்
கண்டுதா ரகையைக் கவின் முகம் குவிந்து

134. திரு - இலக்குமி. 135. மானம் - மான் போன்றவளாகிய, 136. கானல் - வெய்யிலில் நீர்போல் தெரியும் ஒருவகை ஒளியலை. 150. துடியிடை - உடுக்கை போன்ற இடுப்பு; மறலி - எமன் 158. அஞ்ஞான்று - அப்பொழுது, அரிவை - பெண். 158. கவின் - அழகு.