பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



8. அமைச்சன் குடும்பொடு சூழ்ந்த காதை

தன்மகன் படைஞரின் தலைவ னாகிய
சிம்மனோ டமரா வதியைச் சேர்த்து
நன்மணம் வல்லே நடத்த விரும்பிய
காடவன் தன்மனை கமலி கூறிய

5 வாட வைக்கும் வன்செயல் ஓர்ந்தனன்;
ஈடில் என்மகன் சிம்மனை இழித்தே
ஓடச் செய்வதா ஒருத்தி! அவளே
நாடச் செய்வேன் நயந்து சிம்மனை;
அம்பிகா பதியவ் வமரா வதியை

10 நம்புதல் மறந்து நயமொ டென்மகள்
தாரகை தன்னைத் தண்மணம் புரிந்து
சீரது பெற்றுச் சிறப்புடன் வாழ
ஆவன சூழ்வனென் றையமில் லெண்ணம்
மேவச் சூளுரை மேற்கொண் டனன்பின்

15 சிம்மனை யழைத்துச் செப்புவான்: மைந்த!
நம்மனை அமராவதி நண்ணச் செய்வேன்
உமது திருமணம் ஒல்லை நடைபெறும்
நமது தூண்டிலின் நழுவ இயலுமோ?
கன்னி மாடக் காவின் பக்கம்

20 இன்னுெரு முறை நீ ஏகுதல் வேண்டா.
வேந்தனே நின்னை விரும்பி மகளை
ஈந்திடச் செய்வேன்; இனியநம் தாரகை
அம்பிகா பதியை அடையச் செய்வேன்;
நம்பு வீரென நவின்ற வேளையில்,


3. வல்லே - விரைவில். 4. தன் மனை - தன் மனைவி. 16. நம் மனை - நம் வீடு. 17. ஒல்லை - விரைவில்.