பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



காப்பிய ஆசிரியரின் கருத்துரை

5

இரண்டு பாடல்களைத் தவிர, மற்றவை என் சொந்தக் கற்பனைப் பாடல்களே.

படிப்பினைகள்:

மக்களினம் அறிந்து பின்பற்றவேண்டிய படிப்பினைகள் பல, இந் நூலில் அறிமுகப்படுத்தப் பெற்றுள்ளன. இந்தப் படிப்பினைகளைப் பின்பற்றின் பயன்பெறுவது உறுதி. இப் படிப்பினைகள் அமைந்துள்ள பகுதிகளை, பிற்காலத்தில், பாடநூல் குழுவினர், பாட நூல்களில் சேர்த்துப் பயனுறுத்தலாம்.

உரைநடை முன்னுரை:

இஃது செய்யுள் நூலா யிருப்பினும், என்னால் செய்யுட் பகுதிகள் பின்னால் நிரம்ப எழுதப்பெற்றிருத்தலின், உரைநடையும் கலந்ததாக இருக்கவேண்டும் எனக் கருதியே, இந்த முன்னுரையை உரைநடையில் எழுதலானேன்.

உடல் நிலை:

மூளைக் கட்டி (Brain Tumour), உடலை இயக்குவதற்கு மிகவும் இன்றியமையாததான ‘பிட்யூடரி சுரப்பி’ (Pituitary Gland) ஒழுங்காக இயங்காமை ஆகியவற்றால் சோர்வு, களைப்பு, செயலற்ற நிலை, தலைவலி, மயக்கம், கண் திறந்து பார்க்க வியலாமை முதலிய தொல்லைகள் எனக்கு எப்போதும் உண்டு. இக் காப்பியத்தைத் தொடங்கி முடிப்பதற்குள், இடையிடையே, செயலற்ற நிலையும் மயக்கமும் பலமுறை ஏற்பட்டதுண்டு. முற்றிலும் செயலற்றுப் போகுமுன்பே அல்லது இறப்பு நெருங்குமுன்பே, இக் காப்பியத்தை எப்படியாவது விரைந்து முடித்துவிட வேண்டுமெனக் கருதிக் கண்ணை மூடிக்கொண்டே விரைந்து விரைந்து எழுதி நூலை ஒருவாறு முடித்துள்ளேன். என் குடும்பத்தினரும் உறவினர்களும் நண்பர்களும் ஒன்றும் எழுதவேண்டா எனப் பலமுறை மறித்துத் தடுத்தும் எப்படியோ எழுதி முடித்துவிட்டேன்.உடல்நிலை நன்றாயிருந்திருப்பின், இன்னும் ஆர அமர எண்ணி இந்நூலினை யாத்திருக்கலாம்.