பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

அம்பிகாபதி காதல் காப்பியம்

காமத்துப் பாலில் களவியல் பகுதியில்
‘புணர்ச்சி மகிழ்தல்’ எனுந்தலைப் புள்ளது;

75 களவிற் புணர்ந்து மகிழ்ந்த காதலன்
அளவில் சுவையினை அடைந்து மொழிவதாய்க்
குறட்பாடல்சில கூறினார் வள்ளுவர்
குறள்களும் உரைகளும் கூறுவல் முறையே:

(குறள்)

“வேட்ட பொழுதின் அவையவை போலுமே
தோட்டார் கதுப்பினுள் தோள்”

(உரை)

“பூச் சூடிய கூந்தலை யுடைய இவள் தோள்கள் எவ்வெப்போது எவ்வெப் பொருளை விரும்பினேமோ அவ்வப்போது அவ்வப் பொருள்கள் போலவே இன்புறுத்திக் கொண்டேயிருக்கும்”.

(குறள்)

“உறுதோறு உயிர்தளிர்ப்பத் திண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள்”

(உரை)

“மேலே படுந்தோறும் என் உயிர் தழைக்கும்படி தீண்டுவதனாலே, இப் பெண்ணுக்குத் தோள்கள், அமிழ்தத்தினால் ஆக்கப்பட்டிருக்க வேண்டும்”.

(குறள்)

“அறிதோறு அறியாமை கண்டற்ருல் காமம் செறிதோறுஞ் சேயிழை மாட்டு”,