பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

அம்பிகாபதி காதல் காப்பியம்

 

(அமராவதி)


உண்மை நீவிர் உரைப்பன யாவும்
பெண்மைக் கற்பால் பேதுற் றேனியான்;
இன்றென் உடலையே ஈந்தேன் உமக்கே

105ஒன்றி யென்னொடு உவகைகொள் வீரென,

(அம்பிகாபதி)


அம்பி காபதி அடுத்து மொழிவான்:
அமராவதி ஒன்றுனக் கறிவிப் பேனியான்
உன்னைக் குறித்துநீ ஒன்றும் அறியாய்
நன்னர் நினக்கு நானறி விப்பேன்:

110மன்னர் மகணீ மாப்பே ரழகிநீ
நற்பண் பதனை நகையணி யாய்க்கொள்
சிற்பி செதுக்காச் செம்பொற் சிலைநீ
கடல்குளித் தெடுக்காக் கட்டாணி முத்துநீ
அடலுறு சுரங்கம் அகழா வைரம்நீ

115வதிய முருகன் வளர்க்காத் தமிழ்நீ
பொதியிற் பிறவாப் புகழ்மிகு தென்றல்நீ
பூவிடைத் தோன்றாப் பொன்னிறத் தேன்நீ
நாவிடைத் தோன்றா நயக்கும் பாநீ
மயலுடைத் தேவர் மடுக்கா அமிழ்துநீ

120வயலிடை விளையா வளவிய கரும்புநீ
குழலிடைத் தோன்றாக் குளிர்ந்த இசைநீ
எழிலுடை மலரின் எழாத மணம்நீ
சொல்லா ததையும் சொல்லும் கிள்ளைநீ
துள்ளா தியங்கும் தூய மான்நீ

125விண்ணிடைத் தோன்றா வியத்தகு நிலவுநீ
மண்ணிடை முளையா அனிச்ச மலர்நீ


103. பேதுறல் - கலங்குதல், மயங்குதல் 105. உவகை - மகிழ்ச்சி. 114. அடல் - வலிமை. 116. பொதியில் - பொதியமலை. 119. மயல் - ஆசை மயக்கம்; மடுக்கா - அருந்தாத 123. மலரின் - மலரிலிருந்து. 183. கிள்ளை - கிளி.