பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



14. அமராவதி பெற்றோரொடு அளவளாவிய காதை

பரசும் பல்புகழ்ப் பாராள் சோழ
அரசனும் அரசியும் அமரா வதியைக்
கன்னி மாடம் சென்று காண
எண்ணிப் பன்மலர் எடுத்துப் போந்து

5அருமை மகளுக் கன்பொடு சூட்டிப்
பெருமையும் வளமும் பெறுகென வாழ்த்தினர்.
அம்மை யப்பராம் தெய்வம் அடுத்ததாய்
அமரா வதிதன் அரியபெற் றோரைத்
தக்க இருமணித் தவிசில் இருத்தி

10ஒக்க இருவரின் ஒண்டாள் வணங்கிப்
பருப்பும் பழமும் பாலுந் தேனும்
விருப்பொ டீந்து விசிறி நின்றாள்.
கொற்றவன் மகளைக் குறும்பாய் வினவினன்:
அமராவதி! உனக் கன்பு மிகுதி

15அம்மா மீதா அப்பா மீதா
என்ற வேந்தற் கிறுப்பாள் வினாவிடை:
நன்று தந்தாய்! நானா அண்ணனா
உம்பெரு விருப்பிற்குரியவர் யாரென,


1. பரசும் - போற்றத் தக்க. 7. அம்மையப்பராம் தெய்வம் - உமையொரு பாகம் கொண்ட சிவன். 9. தவிசு - இருக்கை. 10. ஒக்க - ஒரு சேர; ஒண்டாள் - ஒண் தாள் - விளங்கும் திருவடி. 11. பருப்பு - முந்திரிப் பருப்பு, வாதுமைப் பருப்பு போன்ற பருப்பு வகை. 13. கொற்றவன் . அரசன். 16. இறுப்பாள் - பதில் கூறுவாள் ; வினா விடை: மறு கேள்வி வாயிலாகத் தரும் விடை - விடையாக வினவுவது.