பக்கம்:அம்புலிப் பயணம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

அம்புலிப் பயணம்

பணத்தை வீண்விரையமாக்க வேண்டாமல்லவா? இரஷ்யர்கள் வலுவான இராக்கெட்டுகளை அமைப்பதில் வல்லுநர்களாக இருப்பதைக் கண்டு வருகின்றோம். அமெரிக்கர்கள் நுட்பமான கருவிகளையும் தொலை நிகழ்ச்சி அறிகருவிகளையும் நிறுவுவதில் கைதேர்ந்தவர்களாக இருப்பதையும் பார்க்கின்றோம். இரு நாட்டினரின் தொழில் நுட்பத்திறன் ஒன்று பட்டால் எவ்வளவோ செயல்கள் எளிதில் கை கூடும் ; வீணாகும் செலவும் குறையும்.

இங்ஙனம் பெரும் பொருளைச் செலவிட்டு விண்வெளிச் செலவுத் துறையில் செயற்கரிய செயல்களைத் திறம்படச் சாதித்துள்ளனர் என்பது உண்மையே. ஆனால், அவற்றால் உருவான பயன் ஏதாவது உண்டா ? இன்னும் ஏதாவது பயன்கள் ஏற்படப் போகின்றனவா? வறுமையும், பிணியும், வளர்ச்சிக் குறையும் உள்ள நிலையில் திணறித் திகைத்து வரும் உலகிற்கு அம்புலிப் பயணத்தால் நன்மைகள் விளையப் போகின்றனவா? -இவைபற்றி ஈண்டுச் சிறிது ஆராய்வோம்.

விண்வெளித் திட்டங்களின் பயனாக ஏற்கெனவே சில நடைமுறை நன்மைகள் விளைந்துள்ளன. முதன்முதலாகச் சந்திரனை நோக்கி ஒரு விண்கலத்தை அனுப்புவதே சிறந்த ஒரு திறனுள்ள செயலாகும். ஓர் அறிவியலறிஞர் கூறியது போல், இச் செயல் பதினாறு கி.மீ. தொலைவிலுள்ள ஓர் ஊசியின் முனையை இங்கிருந்தபடி ஒரு துப்பாக்கிக் குண்டினால் குறி தவறாமல் தாக்குவதற்கு ஒப்பாகும். இத்தகைய திறனுள்ள செயலை மேற்கொள்வதென்றால், இராக்கெட்டிலும் அஃது உயரத்தில் எடுத்துச் செல்லும் விண்கலத்திலும் உள்ள முப்பது இலட்சம் பகுதிகளும் இம்மியளவும் தவறாமல் இயங்க வேண்டும். விண்வெளிப் பயணத்திற்குத் தேவையான பல்வேறு பொருள்களைச் சிறிதும் பெரிதுமான இருபதாயிரம் அமெரிக்க நிறுவனங்கள் உருவாக்குகின்றன. இவை பொருள்களை நூற்றுக்கு நூறு சுத்தமாக, கச்சிதமாகத் தயாரிப்பது என்ற குறிக்கோளுடன் இயங்கி வருகின்றன, இப்பயணத்திற்குத் தேவையான பொருள்களேயன்றி வேறு