பக்கம்:அம்புலிப் பயணம்.pdf/106

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பயணத்தின் பயன்

95

ஆராய்ச்சியின் காரணமாக ஏற்கெனவே சில நன்மைகளை நாம் அநுபவிக்கின்றோம். விண்வெளியில் உலகினை வலம் வரும் தகவல் ஒலிபரப்புச் செயற்கைத் துணைக்கோள்கள், வானிலை ஆராய்ச்சிக்கென அனுப்பப் பெற்றுள்ள செயற்கைத் துணைக்கோள்கள் ஆகியவற்றின் பயனை எத்தனையோ நாடுகள் இன்று அன்றாடம் அநுபவித்து வருகின்றன. இத்தகைய தகவல் ஒலிபரப்புச் செயற்கைத் துணைக் கோள்கள் மூலம் வருங்காலத்தில் முதல் வகுப்பு முதல் கல்லூரிப் படிப்பு வரை எல்லாப் பாடங்களையும் கற்றுக்கொடுப்பது சாத்திய மாகலாம்.

அம்புலியின் வளி மண்டலமற்ற சூழ் நிலை சில சிறப்புத் தயாரிப்புகளுக்குச் சாதகமாக அமையும். எடுத்துக்காட்டாக, வாயுக்களின் கலப்படமின்றித் தூய்மையான உலோகங்களைத் தயாரிப்பது எளிதில் கைவரக் கூடியது. இத்தகைய தூய்மையான உலோகங்களைப் பூமியில் தயாரிக்க வேண்டுமானால் செயற்கை முறையில் வெற்றிடத்தை உண்டாக்கி அங்கு இவை தயாரிக்கப்பெறுதல் வேண்டும். நடைமுறையில் இன்று. இம்முறைதான் மேற்கொள்ளப் பெறுகின்றது. சந்திரனில் கிலோ மீட்டர் கணக்கில் வெற்றிடம் காத்துக் கிடக்கின்றது. அங்கு இம் முறையை மேற்கொள்வது எளிதாகின்றது.

விண்வெளியில் நிலவும் எடையற்ற சூழ்நிலையும் சில சிறப்பான தயாரிப்புகளுக்குச் சாதகமாக இருக்கும் என்று அறிவியலறிஞர்கள் கருதுகின்றனர். காமிரா, தொலைநோக்கி, மூக்குக் கண்ணாடி போன்றவற்றில் பயன்படும் வில்லைகளும் {Lenses), உயர் தர நிலைக்கண்ணாடிகளும் நூற்றுக்கு நூறு சதவீதம் தூய்மையான நிலையில் தயாரிக்கலாம். பல்வேறு பொறிகளில் பயன்படும் பால் பேரிங் உருளைகளையும் (Ball - bearing Cylinders) அணு அளவும் தரங் குன்றாது உருவாக்கலாம். இதனால் இவை இடம்பெறும் பொறி அமைப்புகள் நீடித்த உழைப்பை நல்கும்.

வளி மண்டலமே இல்லாத அம்புலியில் விண்வெளி உடையின்றி மனிதன் ஐந்து நிமிடங்கள் கூட உயிர்வாழ