பக்கம்:அம்புலிப் பயணம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அப்போலோ -17

132

நடுவில் வடகிழக்குப் பகுதியில் டாரஸ்-லிட்ராவ் (Taurus-Littrow)[1] என்ற மலைப்பாங்கான இடத்தில் இறங்கவேண்டும், அதற்குக் கென்னடி முனையிலிருந்து கிளம்பினால் இரவில் தான் புறப்பட வேண்டியுள்ளது. அப்பொழுது தான் வழியில் எரி பொருள் செலவு குறைவாக இருக்கும். இடையில் கலம் செல்லும் வழியைச் சற்று மாற்றித் திருத்தவேண்டிய வேலையும் குறையும். இறங்கும் இடத்திலும் இறங்கும் நேரத்தில் கதிரவன் வசதியான உயரத்திலிருந்து ஒளி வீசும்.

தேர்ந்தெடுக்கப் பெற்ற 'டாரஸ் - லிட்ராவ்' என்ற இலக்குத் தனிச்சிறப்புடையது. இது வேறுபட்ட இயற்கைத் தோற்றம் உடையது ; நில உட்கூற்றியல்பற்றிய பல வகை அமைப்புகள் கொண்டது. இங்குள்ள குன்றுப் பகுதிகளை மூடியிருக்கும் வெளிர் நிறப் பொருள் அம்புலி தோன்றிய காலத்தையொட்டியது, என. அறிவியலறிஞர்கள் கருதுகின்றனர். சுமார் 2,100 மீட்டர் உயரமுள்ள அம்புலிமலையின் அருகிலிருக்கும் பள்ளத்தாக்கிலுள்ள பொருள்களும், மலையின் மீதும் பள்ளத்தாக்குகளிலும் சில கரும்பொருள்களும் எரிமலைகளினின்றும் உருகி வழிந்து பின்பு இறுகியவை என்று கருதப்பெறுகின்றன. இவை அம்புலியின் - உட்புறத்தில் மிக ஆழத்தினின்றும் ஓரளவுக்கு அண்மைக் காலத்தில் வெளிப்பட்டவையாக இருத்தல்வேண்டும்.

கதிரவ மண்டலம், பிரபஞ்சம் இவை தோன்றிய விதம் பற்றி ஆராயும் அறிவியலறிஞர்கட்குப் பழைமையான பொருள்கள் பெருமகிழ்ச்சி தரும். சுமார் 450 கோடி ஆண்டுகட்கு முன்பு அம்புலி தோன்றியதாக மதிப்பிடுகின்றனர் அவர்கள். வாயு மேகங்கள் இறுகி அஃது உண்டானதாக ஒரு கருத்து நிலவுகின்றது. அம்புலிப் பொருள்களின் மாதிரிகள் அப்போதிருந்த நிலைமைபற்றித் துப்புத் துலக்கக்


  1. துருக்கி நாட்டிலுள்ள பாரஸ் என்ற மலைத்தொடரின் பெயரையும் 19 ஆவது நூற்றாண்டில் வாழ்ந்த ஆஸ்திரிய நாட்டு வானியல் வல்லுநரும் கணித மேதையுமான விட்ராவ் என்பார் பெயரையும் இணைத்து இடப்பெற்றது இப் பெயர்.