பக்கம்:அம்புலிப் பயணம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அப்போலோ -17

135

முன்னைய அப்போலோ கலங்கள் எடுத்துச் சென்ற கருவிகள் தவிரப் புதிதாகப் பத்துக்கருவிகளைப் பல்வேறு சோதனைகளை மேற்கொள்ளும் பொருட்டு அப்போலோ - 17 அம்புலி மண்டலத்திற்கு எடுத்துச் சென்றது. அவற்றுள் ஏழு, நிலாத் தரையில் நடத்தும் ஆராய்ச்சித் தொகுப்பைச் சார்ந்தவை. ஒன்று, பூமி முதலிய விண்கோள்கள் அம்புலியைக் கவர்ந்து ஈர்க்கும் விசையின் தன்மையை ஆராய்ந்து கூறும். மற்றொன்று, அம்புலியின் உள்ளிருந்து சிறுசிறு அளவுகளில் தப்பித்து வெளிவரும் வாயுக்களின் மூலக்கூறுகளை ஆராயவல்லது. பிறிதொன்று, விண்வெளியினின்றும் வந்து அம்புலித் தரையில் படியும் தூசியின் அளவைக் கணிக்கவும் விண்கற்களால் தாக்குண்டு பெயர்ந்து விழும் நிலாத்தரைப் பொருள்களால் உண்டாகும் நில அரிப்பினை அளவிடவும் வல்லது. இன்னொன்று, அம்புலியின் பௌதிக இயல்புகளை ஆய்வதற்காக வெடிகுண்டுகளை வெடித்து ஆராயும் தன்மையுடையது.

நிலாத் தரையின் அடியில் பாறைகள் என்ன என்ன வகையில் அடுக் கடுக்காக உள்ளன என்று மேற்பரப்பின் மின் விசைத் தன்மைகளைக்கொண்டு ஆராயும் கருவி ஐந்தாவது. இதன் பயனாக அம்புலியின் உள்ளே நீர் உள்ளதா என்பதைக் கண்டறியலாம். அம்புலியின் ஈர்ப்புவிசை எவ்வாறு பரவியுள்ளது என்பதை ஆறாவது கருவி ஆயும். இதனை விண்வெளி வீரர்கள் நிலா ஊர்தியில் வைத்து அதில் ஏறிச்செல்லும் இடங்களிலெல்லாம் பயன்படுத்தி ஈர்ப்புவிசை நிலப்படம் வரைய உதவுவர். 'நிலா 'நியூட்ரான் ஆய்வு' என்ற ஏழாவது கருவி நிலாத்தரையில் ஏற்படும் அரிப்புகள் பற்றிய செய்திகளைத் தயாரித்துத் தரும். அம்புலித்தரையில் இறங்கிய இருவரும் இந்தக் கருவிகளைக் கையாண்டு ஆய்வுகளை நடத்தினர். இவர்கள் அம்புலியில் மூன்று நாள் மூன்று மணி ஒரு நிமிடநேரம் தங்கியிருந்தனர். இஃது அப்போலோ - 16 விண்வெளி வீரர்கள் அங்குத் தங்கியிருந்த நேரத்தைவிட, நான்கு மணிநேரம் அதிகமாகும்.