எதிர்காலத் திட்டங்கள்
139
எவரும் செல்லார். ஆனால், மறு நாள் அப்போலோ கலம், ஒன்றில் மூன்று விண்வெளி வீரர்கள் பறந்து சென்று பூமியை வலம் வந்து கொண்டிருக்கும் விண்வெளி ஆய்வுக் கூடத்தில் இணைவர். பின்னர் அவர்கள் ஆய்வகத்தில் நுழைந்து அங்கு அமைக்கப்பெற்றிருக்கும் கருவிகளைப் பயன்படுத்திச் சோதனைகள் நடத்துவர். 28 நாட்கள் கழித்துத் தம் கலத்தினுள் மீண்டும் புகுந்து பூமிக்குத் திரும்புவர், விண்வெளி ஆய்வகம் காலியாகப் பூமியைச் சுற்றிக் கொண்டிருக்கும். இரண்டு திங்கட்குப் பின்னர் இரண்டாவது விண்வெளி வீரர்கள் குழு புவியினின்றும் புறப்பட்டு ஆய்வகத்தை அடையும். அங்கு இவர்கள் 55 நாட்கள் தங்கி ஆய்வுகள் நடத்திப் பூமிக்குத் திரும்புவர். ஒரு மாத இடைவெளிக்குப் பின்னர் மூன்றாவது குழு சென்று ஆய்வகத்தில் இன்னொரு 56 நாட்கள் தங்கி ஆய்வுகளை மேற்கொள்ளும். இஃது அமெரிக்காவின் விண்வெளி ஆய்வகம் பற்றிய திட்டம் ஆகும்.
மேற்கூறிய இத்திட்டம் புவி ஆய்வை மையமாகக் கொண்டது. நடப்பு ஆண்டில் (1973) எட்டுத் திங்கள் காலம் விண்வெளி ஆய்வகம் பூமியைச் சுற்றி வலம்வந்து கொண்டிருக்கும். இந்த ஆய்வகம் திரட்டிய படங்களையும் செய்திகளையும் ஆய்ந்து பூமிபற்றிய சிறப்பான செய்திகளைத் தயாரிக்க இந்தியா உட்பட 17 நாடுகளைச் சேர்ந்த அறிவியலறிஞர்களை 'நாசா' என்ற விண்வெளி நிலையம் தேர்ந்தெடுத்துள்ளது. இவர்களுடைய ஆய்வு வேளாண்மை, காடு வளர்ப்பு, மீன் பிடிப்பு, சூழ் நிலைக்கேடு தடுப்பு, கனிவளம் காண்டல், வறட்சி, வெள்ளத் தடுப்பு, நிலப் படம் வரைதல் போன்ற பல்வேறு துறைகளுக்குப் பெரிதும் உதவும்.
இந்த ஆய்வகம் விண்வெளி ஆய்வுகள் நடத்தவும் பயன்படும். பூமியைச் சூழ்ந்து காற்று மண்டலம் உள்ளதால் பூமியினின்றும் விண்வெளி ஆய்வுகளை மேற்கொள்ளும் பொழுது இடையிலிருக்கும் வளிமண்டலம் அறிவியல் உண்மைகளைத் தடுத்து விடுகின்றது ; சில சமயம் திரித்தும் விடுகின்றது. வளிமண்டலத்தைக் கடந்து விண் வெளியில்