பக்கம்:அம்புலிப் பயணம்.pdf/151

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140

அம்புலிப் பயணம்

சுழலும் ஆய்வகத்திலிருந்து ஆய்வுகளை மேற்கொள்ளும் பொழுது இந்த இடையூறுகள் அகலும். ஆதலின், இந்த முறையில் புதிய செய்திகள் துல்லியமாகக் கிடைக்கும் வாய்ப்பு உண்டாகின்றது.

(2) விண்வெளி - ஓடம் (Space shuttle) : விண்வெளி ஆய்வகத் திட்டத்தை அடுத்த முயற்சி இதுபற்றியது. இஃது 1978இல் மேற்கொள்ளப் பெறும். விண்வெளியில் புவியைச் சுற்றிப் பறந்து கொண்டிருக்கும் விண்வெளி ஆய்வகம் அல்லது விண்வெளி அரங்கிற்குப் (Space plateform) பூமியிலிருந்து சென்றுவரப் பயன்படுவது விண்வெளி ஓடம். இது விண் வெளிக்குப் பறந்து சென்று, தனது பணி முடிந்த பின்னர், புவிக்குத் திரும்பி ஒரு சாதாரண விமானம் இறங்குவது போன்று பாதுகாப்பாக விமான தளத்தில் இறங்க வல்லது. இதே ஓடத்தை மீண்டும் மீண்டும் 100 முறை பயன்படுத்தலாம். இதனால் விண்வெளிப் பயணச் செலவு குறைகின்றது. 12 பயணிகளையும் 4 விமானிகளையும் கொண்டு செல்ல வல்ல இதில் எவரும் பயணம் செய்யலாம். அப்போலோ கலத்தை இயக்கிச் செல்லும் விண்வெளி விமானிகளுக்கு இருக்கவேண்டிய அளவு திறமை இந்த ஓடத்தை இயக்கும் விமானிகட்கு இருக்க வேண்டியதில்லை. இவர்களுடைய திறம், சோதனை விமானிகட்கும் (Test pilots) விண்வெளி விமானிகட்கும் (Astronauts) இடைப்பட்டதாக இருந்தால் போதும் என்று கணிக்கப்பெற்றுள்ளது. ஆயின், இவர்கள் கடற்பயணத் துறையில் நல்ல பயிற்சி பெற்றவர்களாக இருத்தல் வேண்டும்.

கடல் மட்டத்திலிருந்து சுமார் 1200 மீட்டருக்கும் அதிகமான உயரத்திலிருந்து விண்வெளி ஓடத்தைச் செலுத்துவது உகந்ததாக இருக்கும் என்று கருதுகின்றனர். இதனை விண்வெளிக்கு உந்திச் செல்லும் இராக்கெட்டுகள் இதன் வெளிப்புறமாக அமைக்கப் பெற்றிருக்கும். விண்வெளி ஓடம் மேலே சென்று பூமியைச் சுற்றத் தொடங்கியதும் இந்த இராக்கெட்டுகள் தாமாகக் கழன்று பூமியை