எதிர்காலத் திட்டங்கள்
141
வந்தடையும். இவற்றை மீண்டும் பயன்படுத்தலாம். பூமியின் சுற்றுவழியில் ஓடிவரும் ஓடம் அங்கு மிதந்து வரும் விண்வெளி ஆய்வகத்துடன் இணையும். அப்பொழுது ஓடத்தில் உள்ளவர்கள் ஆய்வகத்தினுள் நுழைந்து கொள்வர். பின்னர் இந்த ஓடம் பிரிந்து பூமியை நோக்கி வந்து விமான தளத்தில் பாதுகாப்பாக இறங்கும். இந்த ஓடத்தை மிதவைக் குடை (Parachute) வாயிலாகவும் கடலில் இறங்கச் செய்யலாம். இப்பொழுது மேற்கொள்ளப்பெறும் விண்வெளிப் பயணத்தில் ஒரு விண்வெளிக் கலத்தைப் பூமியைச் சுற்றி வலம்வருமாறு அனுப்ப ஓர் இராத்தல் எடைக்குச் சுமார் 600 முதல் 700 டாலர் (ஒரு டாலர் 7 ரூபாய்) வரை செலவாகிற தாகக் கணக்கிட்டுள்ளனர்; ஆனால், விண்வெளி ஓடத்தையும் அதனைச் செலுத்தும் இராக்கெட்டுகளையும் {Liquid Rockets) பன்முறை பயன் படுத்தலாமாதலின், இந்த முறையில் ஓர் இராத்தல் எடைக்குச் சுமார் 100 டாலருக்குக் குறைவாகவே செலவாகும் எனக் கணக்கிட்டுள்ளனர். 1980-வரை இந்தத் திட்டங்கள் செயற்பட்டு வரும்.
இந்தப் பத்தாண்டுக் காலத்தில் இப் புவியோரின் கருத்தினைக் கவரும் வேறொரு செய்தியும் உள்ளது, அஃதாவது, 1975 இல் அமெரிக்காவின் அப்போலோ கலமும் இரஷ்யாவின் சோயூஸ் கலமும் விண்ணிலே இணையப் போகின்றன. கோட்பாடுகளில் எதிர்முனையில் உள்ள இந்த இரு நாடுகளும் விண்வெளித் துறையை அடிப்படையாகக் கொண்டு அறிவியல் தொழில் நுட்பத் துறைகளில் தனித்தனியே கண்டுவரும் முன்னேற்றங்களின் பரிமாற்றத்திற்கு இதனால் ஒருவழியும் தோன்றலாம். இந்தக் கூட்டு முயற்சியால் விண்வெளித்துறையிலுள்ள சில சிக்கல்களும் தீர்க்கப்பெறலாம். இதனால் அமெரிக்க விண்வெளி விமானிகள் தம் தகுதிகளுடன் இரஷ்யமொழி கற்கவேண்டிய நிலையும் தோன்றலாம்.