பக்கம்:அம்புலிப் பயணம்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பதிப்புரை

ம்புவியில் வாழும் மனிதன் அம்புலியை எட்டிப்பிடிக்க இயலாது என்றிருந்த காலம் மாறி, அமெரிக்க, உருசிய அறிவியலறிஞர்களின் அயரா உழைப்பினால் இன்று அம்புலியின் அடிவைக்கத் தொடங்கிவிட்டான் மனிதன். அதுமட்டுமன்று. அம்புலிக்குப் பயணம் செய்வது - அதனால் ஏற்படும் பயன்களை ஆராய்வது என்று இன்னபிற ஆராய்ச்சிகள் விரைந்து நடைபெறுகின்றன.

இங்ஙனம் திங்கள் மண்டிலம் பற்றிய ஆராய்ச்சிகள் வளர்ந்து வருவதுபோலவே, அது பற்றிய நூல்களும் பெருகலாயின. எனவே, முள்னர் 'இளைஞர். வானொலி' 'இராக்கெட்டுகள்' 'அதிசய மின்னணு' 'இளைஞர் தொலைக்காட்சி' ஆகிய அறிவியல் நூல்களை இயற்றிய பேராசிரியர் டாக்டர் ந. சுப்பு ரெட்டியார் அவர்கள் 'அம்புலிப் பயணம்' என்னும் இந் நூலினையும் எழுதியுள்ளார். அன்னாருக்குக் கழகத்தின் நன்றி என்றும் உரித்தாகும்.

இப் புத்தகத்தில் அப்போலோப் பயணம்.17 வரையுள்ள செய்திகள் அடங்கியுள்ளன. அம்புலிப் பயணம் பேருழைப்பிற்கும் பெருஞ் செலவிற்கும் உரித்தாயிருத்தலின் அமெரிக்க அறிவியலறிஞர்கள் அதனைத் தற்போது நிறுத்தி வைத்துள்ளனர். எனினும், உலைவிலாதுழன்று ஊழையும் உப்பக்கம் காணும். அவர்கள் எதிர்காலத்தில் அம்புலிப் பயணத்தில் முழு வெற்றி காண்பர் என்பது திண்ணம்.

கழகவழி வெளிவந்துள்ள பேராசிரியர் சுப்பு ரெட்டியாரவர்களின் பிற நூல்களை ஆதரித்ததுபோலவே, தமிழகம் இதனையும் ஏற்றுப் போற்றும் என நம்புகிறோம். நூலகங்கள் தோறும் இதனை இடம்பெறச் செய்வதன் மூலமும், சிறந்த சிறுவர் இலக்கியமாகப் போற்றுவதன் மூலமும் அரசினரும் இதனை ஆதரித்தல் மிகமிக வேண்டற்பாலதாகும்.

சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.