பக்கம்:அம்புலிப் பயணம்.pdf/56

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அப்போலோ- 8

45

கண்டன. சந்திரனின் பின்புறத்தை-அஃதாவது பூமியை என்றுமே நோக்கியிராத பகுதியை-முதன்முதலாக மனிதன் கண்டது இப் பயணத்தின் பொழுதுதான். இப் பயணத்தின் போது சந்திரனுக்கு அருகிலிருந்து எடுக்கப்பெற்ற ஒளிப் படங்களைக் கொண்ட ஃபிலிம்கள் (Films) முதன்முதலாகப் பூமிக்குக் கொண்டுவரப்பெற்றன. இதற்கு முன்னர் எடுக்கப் பெற்ற ஒளிப் படங்கள் யாவும் தாமாக இயங்கும் விண்கலங்களால் எடுக்கப்பெற்று தொலைக்காட்சி (Television) மூலம் பூமிக்கு அனுப்பப்பெற்றவை.

அப்போலோ - 8இல் சென்ற விண்வெளி வீரர்கள் இதுகாறும் மனிதர்கள் பூமியிலிருந்து விண்வெளியில் போயிராத தொலைவினை-(233,000 மைல்கள்) 373,000 கிலோ மீட்டர்கள்-அடைந்தனர் ; இத்தொலைவு பூமியிலிருந்து சந்திரனுக்கு மறுபுறம் உள்ள சுற்ற வழியில் மனிதர்கள் இருக்கும்போது உள்ளதாகும். இதுகாறும் மனிதர்கள் பயணம் செய்திராத வேகங்களிலும் பயணம் செய்தது முதன்முதலாக இப் பயணத்தின் பொழுதுதான். பூமியின் கவர்ச்சி ஆற்றலுள்ள விண்வெளிப் பகுதியைக் கடந்து சந்திரனின் கவர்ச்சி ஆற்றலின் பகுதியில் நுழையும் பொழுது விண்வெளி வீரர்கள் மணிக்கு (24,171 மைல்) 88,674 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றனர். திரும்பவும் அவர்கள் பூமியைச் சுற்றியுள்ள வளி மண்டலத்தில் நுழையும் பொழுது மணிக்கு (24,629 மைல்) 39,406 கிலோ மீட்டர் வேகத்தில் வந்தனர். சிந்தனைக்கும் எட்டாத நெடுந் தூரத்திலுள்ள மனிதர்கள் செய்தித் தொடர்பு கொண்டதும் முதன்முதலாக இப் பயணத்தின் பொழுதுதான்.

பயணம் செய்த வீரர்கள் : அப்போலோ - 8இல் பயணம் செய்த விண்வெளி வீரர்கள் மூவர். அவர்கள் ஃப்ராங்க் போர்மன் (Frank Borman), ஜேம்ஸ் ஏ. லோவெல் (James A. Lovell), வில்லியம் ஏ. ஆண்டர்ஸ் (William A, Anders) ஆகியவர்கள் ஆவர். இந்த மூவருள் பயணத்தின் தலைவராக இருந்த போர்மனுக்கு வயது நாற்பது. விண்வெளிப் பயணங்களுள் மிக அதிகநேரம் நீடித்த பயணம் ஜெமினி-1 இன் பதினான்கு