பக்கம்:அம்புலிப் பயணம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அப்போலோ - 9

63

பெற்றது. ஆள் ஏறிச் சென்ற அமெரிக்க விண்வெளிக் கலத்தில் இங்ஙனம் நடந்தேறியது இதுவே முதல் தடவையாகும். தாய்க்கலத்தினின்றும் சேய்க்கலத்தைப் பிரிப்பதும் இணைப்பதும் ஆகிய ஆறு மணி நேரச் சோதனை பூமியைச் சுற்றிய விண்வெளிப் பாதையிலேயே நடைபெற்றதாகும். விண்வெளி வீரர்கள் அம்புலியில் இறங்கும்போது செய்ய வேண்டியவை அனைத்தையும் இங்குச் செய்து பார்த்தனர். சந்திரனில் இறங்க மேற்கொள்ளும் பயணத்தின்போது சந்திரனை நோக்கிச் செல்லும் விண்வெளிக் கலத்திலும் இது போன்ற அம்புலி ஊர்தியே இருக்கும் ; அக்கலம் சந்திரனைச் சுற்றி வலம் வரும்போது அம்புலி ஊர்தியை அதினின்றும் பிரித்துச் சந்திரனின் தரையில் இறங்குமாறு தனியே இயக்கிச் சென்று இறங்கும் : செயலை மேற்கொள்வர் விண்வெளி வீரர்கள். சந்திரனின் தரையில் தம் பணிகளை நிறைவேற்றிய பிறகு , அங்கிருந்து அம்புலி பார்தியிலேயே திரும்பும் பயணத்தை மேற்கொண்டு தாய்க்கலத்துடன் வந்து இணைதல் வேண்டும்.

முதலில் அம்புலி ஊர்தியைப் பிரிக்கமுயலுகையில் தாய்க் கலத்துடன் அதை இணைத்திருந்த பிணைப்பு சுழல்வதில் சிறிது சிரமம் இருத்தது ; இதனால் சற்றுக் கவலையும் உண்டாயிற்று. ஆனால், விண்வெளி விமானி ஸ்காட் இரண்டாவது முறை விசையைச் சற்றுப் பலமாகத் தட்டிய பொழுது பிணைப்பு விடுபட்டு அம்புலி ஊர்தி பிரிந்தது. ஆனால், அம்புலி ஊர்தியின் விமானிகள் உடனே நெடுந்தூரம் விலகிச் சென்று விடவில்லை. முதலில் 16 கி.மீ. தொலைவும், அடுத்து 45 கி.மீ. தொலைவும் சென்று பார்த்தனர். இந்நிலையில் எல்லாப் பொறிகளின் இயக்கங்களையும் சரி பார்த்தனர். அவை யாவும் சரியாக இயங்குகின்றன என்று உறுதி செய்த பிறகு தான் 180 கி.மீ. தொலைவு விலகிச் சென்றனர். பொறிகளில் ஏதாவது கோளாறுகள் நேரிட்டால் கலங்கள் தாமாகச் சுழன்று சேர்ந்து கொள்வதற்கு வசதியாக இருக்கவேண்டும் என்பதற்காகவே இங்ஙனம் சிறிது சிறிதாக, அதுவும் பையப் பைய, விலகிச் சென்றனர்.