பக்கம்:அம்புலிப் பயணம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அம்புலியில் முதல் மனிதன்

85

விசைகளை இயக்கி அதனை அம்புலித் தரையில் இறக்கினர் அதிலிருந்த விண்வெளி வீரர்கள். 'கழுகு' சந்திரனில் இறங்கியதும் இருவரும் கதவைத் திறந்து கொண்டு உடனே வெளியே வரவில்லை. ஊர்தியிலுள்ள முக்கோண வடிவமான இரு சாளரங்களின் வழியாகச் சந்திரனின் மேற்பரப்பைப் பரர்ப்பதுடன், அப்போதைக்கு மன நிறைவு பெற்றனர். ஏனெனில் அம்புலியில் இறங்கிப் பதினைந்து மணி நேரத்திற்குப் பிறகுதான் அதன் தரையில் அடியெடுத்து வைக்கலாம் என்பது அவர்கட்கு இடப்பெற்றிருந்த கட்டளை! இறங்கிய வேகத்தில் ஊர்திக்கு ஏதாவது ஊறு நேர்ந் துள்ளதா என்பதை முதலில் அவர்கள் சோதித்துப் பார்த்தனர். பிறகு இனிமையாக உண்டு அமைதியாக எட்டு மணிநேரம் உறங்கி ஓய்வு கொண்டனர்.

ஓய்விற்குப் பிறகு ஆர்ம்ஸ்ட்ராங்கும் ஆல்டிரினும் விண்வெளி உடைகளை அணிந்து கொண்டனர். தம்மிடமிருந்து கிட்டத்தட்ட 112 கி.மீ. உயரத்தில் சந்திரனைச் சுற்றி வந்துகொண்டிருந்த மைக்கேல் காலின்சுடன் உரையாடினர். பூமியிலுள்ள அறிவியலறிஞர்களுடனும் தொடர்பு கொண்டனர். 'இறங்கலாம்' என்ற கட்டளை கிடைத்ததும் 'கழுகின்' கதவினைத் திறந்து கொண்டு ஆர்ம்ஸ்ட்ராங் மட்டிலும் வாயிலில் நுழைந்து சின்னஞ் சிறிய ‘தாழ்வாரத்தில்' நின்றவண்ணம் அம்புலியின் மேற்பரப்பை நோக்கினார். அம்புலியை இங்ஙனம் மனிதக் கண்கள் நோக்கியது இதுவே முதல் தடவையாகும்!

இந்த நிலவுலகில் கோடானுகோடி மிக்க மக்கள் ஆர்வத்துடன் தொலைக்காட்சி அல்லது வானொலிப் பெட்டியின் அருகில் அமர்ந்து கொண்டு இக்காட்சியை நோக்கியவண்ணம் இருந்தனர். விநாடிக்கு விநாடி அவர்களின் ஆவல் குறுகுறுப்பு அதிகரிக்க, வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த அந்த மாபெரும் செய்தியை எதிர்பார்த்துத் துடிப்புடன் காத்திருந்தனர். கனவு நனவாகும் வேளை நெருங்கி நெருங்கி வந்து கொண்டிருந்தது. பன்னெடுங் காலமாக நடைபெறாது நடைபெறவிருக்கும் ஓர் அரிய செயலைக் காண, அறிவியல்