பக்கம்:அம்புலிப் பயணம்.pdf/97

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

85

அம்புலிப் பயணம்

அற்புதங்களுக்கெல்லாம் கொடுமுடி வைத்தாற் போன்ற ஒரு நிகழ்ச்சி கண்ணுக்கு மெய்யாக நிகழ இருப்பதைப் பார்க்க, அவர்கள் காத்துக் கிடந்தனர். ஆர்ம்ஸ்ட்ராங் 'கழுகி' லிருந்து நீண்டு கொண்ட ஓர் ஏணி வழியாகப் பையக் கீழே இறங்கினார். நான்கு இலட்சம் கிலோ மீட்டர்கட்கு அப்பாலுள்ள மக்களின் இதயத்துடிப்பு அதிகரித்தது. ஆர்ம்ஸ்ட்ராங் ஏணியின் இறுதிப்படியில் இறங்கி, “இது மனிதனுடைய ஒரு சிறிய தப்படியே, ஆனால் மனிதகுலத்தின் ஒரு மாபெரும் பாய்ச்சலாகும்" என்று சொல்லிய வண்ணம் கனமான காலணி அணிந்திருந்த தமது இடதுகாலை அம்புலியின் மேற்பரப்பில் ஊன்றினார்; அடுத்து மற்றொரு காலையும் வைத்தார். மனிதன் சந்திரனை வெற்றி கொண்டாகி வீட்டது! உலகில் கோடிக்கணக்கான மக்களின் வாழ்த்துக் குரல்கள் மண்ணதிர விண்ணதிர எழுந்தன.

பத்தொன்பது நிமிடத்திற்குப் பிறகு ஆல்டிரினும் அவருடன் வந்துசேர்ந்தார். இருவரும் அண்ணாந்து. நோக்கினர். பகலவன் அப்போதுதான் சந்திரனின் தொடு வானத்தில் தோன்றினான். தொலைவில் அரைவட்டமாகப் பூமி காட்சி அளித்தது. அதன் ஒருபாதி பகலவன் ஒளியால் ஒளிர்ந்தது; மற்றொரு பாதி இருண்டு கிடந்தது. அம் புலியில் ஒரு பகல் பூமியில் 14 நாட்கள் என்பதையும் இரவும் அப்படியே என்பதையும் நாம் அறிவோம். வளிமண்டலமே இல்லாத - அந்தப் பாழ்வெளியில் கதிரவனின் கதிர்கள் அம்புலியைக் கடுமையாகத் தாக்குகின்றன. ஆயினும் விண்வெளி உடை அணிந்திருந்த வீரர்கள் இருவரும் அந்தக் கடும் வெப்பத்தால் பாதிக்கப் பெறவில்லை.

அம்புலித் தரையில் ஆர்ம்ஸ்ட்ராங் நடக்கத் தொடங்கினார். பூமியில் நடப்பதுபோல் அங்கு நடக்க முடியாது. இலேசாக, கங்காரு போல் எழும்பி எழும்பிக் குதித்து நடக்க வேண்டும். ஆர்ம்ஸ்ட்ராங் இதைப் பூமியில் எத்தனையோ முறை செய்து பழகியிருந்ததால் இப்போது அவ்வாறு செய்வது எளிதாக இருந்தது. சந்திரனில் இருக்கும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் மூன்று மணி நேரம் என்ற