பக்கம்:அம்பு எய்த பழம்.pdf/103

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 டெல் : என்ன இருந்தாலும் உம்மிடம் இரக்கப் படுகிறேன்! பரமண்டலத்திலுள்ள பகவான்தான் உம்மைக் காக்க வேண்டும்! இளம் வயது, இராஜ வம்சம்-இந்தக் கதியா வரவேண்டும்? எல்லாம் அவன் செயல்!-உமக்கு உடந்தையா யிருந்த கொலைகாரர்கள் எங்கே?

சந்நியாசி: எங்கே என்றுதான் நானும் கேட்கிறேன். அந்தப் பயங்கரம் நடந்த நாள் முதல் நானும் அவர்களில் யாரையும் சந்திக்கவில்லை. எந்தெந்தக் காடுகளில் திரிகிறார்களோ, தெரியாது...நான் எங்குப் போனாலும் அச்சமாயிருக்கிறது. மக்கள் வாழும் இடங்களுக்குச் சென்றால் எவரும் என்னைப் பிடித்துக் கொடுக்க முடியும்! மலைகளும் மேடுகளுமாக அலை கிறேன்! என் நிழலே என்னைப் பயமுறுத்தித் துரத்துகிறது! என்னை நீர்தான் காக்கவேண்டும்!

(முழங்கால் படிந்து விழுகிறார்.)

டெல் : (கை கொடுத்து எழுப்பி) என் உள்ளமும் உருகி நிற்கிறது. எனக்கு ஒரே யோசனைதான் தோன்றுகிறது- அதுவும் இந்த_நேரத்தில் ஆண்டவுன் அருளால் உதயமாகிறது-நீர் நேரே ரோமாபுரிக்குப் போய்ப் போப் ஆண்டவரிடம் சரணடைவதே நல்லது! அதோ தெரியும் மலையைத் தாண்டினல், அப்புறம் சமவெளியுள்ளது. அங்கிருந்து பாதையைக் கண்டுபிடித்துச் செல்லும். பாதை நெடுகிலும் சிலுவைகளைக் கண்ட இடங்களிலெல்லாம் விழுந்து பணிந்து, இந்தப் பாவத்திற்கு ஆண்டவனிடம் மன்னிப்புக் கோரிக்கொண்டே செல்லும்! நெஞ்சு நிம்மதி யடையட்டும்!

(பல கொம்புகள் ஊதும் ஒலியும் மக்களின் பாடலும் ஒலிக்கின்றன.)

ஜனங்கள் வருகிறார்கள்! சீக்கிரம் புறப்படும்!

ஹெட்விக் : (உள்ளே ஓடிவந்து) டெல், டெல் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்! அதோ அப்பா வருகிறார், ஜனங்களும் கூட்டமாக வருகிறார்கள்!

டெல் : ஹெட்விக், ஹெட்விக்! சீக்கிரமாக உள்ளே போய் இவருக்கு உண்பதற்கு ஏதாவது கட்டிக்கொடு! யார், எங்கே போகிறார் என்றெல்லாம் கேளாதே!

(வீட்டுக்கு முன் பக்கமாய்ப் போகிறான்.)