பக்கம்:அம்பு எய்த பழம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



9

தந்தையோடு பேசுவதைக் கவனமாய்க் கேட்டிருக்கிறேன். ஆகையால் நான் சொல்வதைப் பெண் பேச்சென்று ஒதுக்கர்மல் கேளுங்கள். நீங்கள் சீரும் சிறப்புமாக வாழ்வதில் கவர்னருக்கு எரிச்சல். சுவிஸ் மக்களை ஆஸ்திரியச் சக்கரவர்த்திக்கு நிலையான அடிமைகளாக வைக்கவேண்டும் என்பது அவர் ஆசை. நீங்கள் அதற்கு இடையூறாக இருக்கிறீர்கள் அல்லவா ?

ஸ்டாபாச்சர்: ஆமாம், இதற்காகத்தான் கவர்னர் ஜெஸ்லர் என்னை வெறுக்கிறார்.

ஜெர்ட்ருட் : ஆம், நீங்கள் பரம்பரைச் செல்வத்துடன், சொந்த நாட்டில் சுகமாக வாழ்கிறீர்கள். அவருக்குக் கவர்னர் வேலைதான் மிச்சம்; வேறு சொத்து, சுகமொன்றும் இல்லை. காமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சளாவதுபோல், அவர் கண்ணுக்கு எல்லாம் சந்தேகம்தான்! உங்களை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று அவர் பல நாட்களுக்கு முன்பிருந்தே கருவிக்கொண்டிருக்கிருர் — ஆனால் நீங்களோ நிலைத்து நிற்கிறீர்கள் ! அவராகச் சதி செய்து உங்களை வீழ்த்தும்வரை நீங்கள் காத்திருக்க வேண்டுமா ? அல்லது, திறமையுடன், முன்கூட்டி எச்சரிக்கையாக ஏற்பாடு செய்து, அதைத் தடுக்க வேண்டுமா ? சொல்லுங்கள் !

ஸ்டாபாச்சர் : நாம் என்ன செய்ய வேண்டும் என்கிறாய் ?

ஜெர்ட்ருட்: என் யோசனையைக் கேளுங்கள். இங்கே நமது சுவிஸ் மாவட்டத்தில் நல்ல மனிதர்கள் எல்லோரும் இந்தக் கவர்னரின் கொடுமையால் எரிச்சலடைந்திருக்கிறார்கள். யூரி மாவட்டத்திலும், அந்தர்வால்டனிலும் மக்கள் இப்படித்தான் கொடுங்கோல் ஆட்சியில் குமுறிக்கொண்டிருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. இங்கே ஜெஸ்லரும் அங்கே லாண்டன்பர்கரும் வெறியாட்டம் ஆடுகிறார்கள். அங்கேயிருந்து ஓடங்களில் வருகிற ஒவ்வொரு வரும் புதுப்புதுக்கொடுமைகள், அநீதிகள் பற்றியே பேசுகின்றனர். இனிச் சும்மா இருக்கக்கூடாது. உங்களைப் போன்ற சிலர் இரகசியமாகக் கூடி ஆலோசித்துக் கவர்னர்களுடைய கொடுங்கோல் ஆட்சிக்குச் சாவு மணி அடிக்க வேண்டும். ஆண்டவன் உங்களுக்குத்தான் துணை