பதிப்புரிமை
ஜெர்மானியக் கவிஞரும், நாடகாசிரியரும், தத்துவஞானியுமான ஃபிரடரிக் ஷில்லர் (1759-1805) எழுதிய இந்த நாடகம் அவர் இயற்றி யவைகளுக்குள் தலை சிறந்தது. அவர் கடைசியாக எழுதிய நூலும் இதுவே. இது 1804இல் ஜெர்மனியில் வெளியிடப்பட்டது. ஒன்றரை நூற்றாண்டுகளுக்குப் பின், இப்போது, இந்தத் தமிழ் மொழிபெயர்ப்பை மகிழ்ச்சியுடன் வெளியிடுகிறோம்.
ஷில்லர் உலகப் புகழ்பெற்ற ஜெர்மானியக் கவிஞரான கதேயின் நண்பர். வில்லியம் டெல்லின் சரிதையை முதலில் ஒரு காவியமாகப் பாடவேண்டும் என்று கதே கருதியிருந்தார். பல ஆண்டுகளாக அவ்வாறு செய்ய முடியாமல் போகவே, தம் நண்பர் அதை நாடகமாக எழுதும் பொருட்டுக் கதே தமக்குத் தெரிந்த தகவல்களை யெல்லாம் கூறி உதவி செய்தார்.
டெல்லின் கதை ஷில்லரின் உள்ளத்தைக் கவர்ந்துவிட்டது. நாட்டுப்பற்றும் வீரமும் நிறைந்த அக்கதையை, சுவிட்சர்லாந்தில் மட்டும் அல்லாமல் உலகம் எங்கும் பரவும் வகையில் அவர் இயற்றிய இந்நாடகம், படிக்க இனிதாகவும் நடிக்க அற்புதமாகவும் அமைந்துவிட்டது.
சுவிட்சர்லாந்து என்பது ஐரோப்பாவில் உள்ள மலைப்பாங்கான ஒரு சிறு நாடு. இக்காலத்தில் அதன் பரப்பு சுமார் 16,000 சதுர மைல். அதன் மக்கள் தொகை அரைக்கோடிக்கும் குறைவானது. மலைகளும், எண்ணிறந்த ஏரிகளும், ஆறுகளும் செறிந்து நாடு முழுதும் இயற்கை எழில் கொழிக்கின்றது.
650 ஆண்டுகளுக்கு முன் வில்லியம் டெல் காலத்தில், அந்நாடு மூன்று மாவட்டங்களைக் கொண்டிருந்தது. ஆஸ்திரியர்களுடைய ஆதிக்கம் அங்கு ஏற்பட்டிருந்தது. நாளுக்கு நாள் கொடுமைகள் பெருகின. நெடிய மலைகளின் நடுவே, சாரல்களிலும், பரப்பு மிக்க ஏரிகளின் கரைகளிலும், புல் தரைகளிலும் பிறர் தலையீடின்றித் தங்கள் கால்நடைகளுடன் வாழவே சுவிஸ் மக்கள் விரும்பினார்கள். ஆனால் திமிர் பிடித்த ஆஸ்திரியக் கவர்னர்கள் இதற்குத் தடையாக நின்றார்கள். இதனால் அந்த நாட்டில் அடிக்கடி தோன்றும் புயல்களைப் போலவே, அரசியல் வானிலும் புயல் ஆஸ்திரிய ஆட்சி அழிந்து, கொடுங்கோலர் ஒழிந்தனர்.