பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

தால் ஒன்பது கருத்துகள் ஆக்கித் தருவது சாதாரண சாதனையல்லவே. ஆழ்ந்த அறிவு, பரந்த ஞானம், பண்பட்ட உள்ளம், தான் பெற்ற கல்வியின்பத்தை-ஆன்மீக இன்பத்தை மற்றவரும் பெறவேண்டும் என்ற பரந்த மனப்பான்மை கொண்ட நம் பேராசிரியர் அ.மு. பரமசிவானந்தம் இந்த அசாதாரண சாதனையை ஒரு வேள்வி போலச் செய்து முடித்திருக்கிறார்.

நிர்வாண் அளித்த மூலக்கருத்து 'அப்பன் பரப்பிரமம், அன்னை பிரகிருதி, அண்டம் அப்பன் அன்னை விளையாடும் இடம்' அப்பப்பா! பேராசிரியர் அந்தக் கருத்தைப் பட்டை தீட்டி ஆயிரக்கணக்கான கோணங்களிட்டு என்றும் மங்காத வைரக் கருத்தாக அளித்திருக்கிறார். நிர்வாண் வெறும் பெரும் மூச்சு விட்டது. பேராசிரியராே அதை இடிமுழக்கமாக்கி விட்டார்.

இந்தக் காலத்தில் இந்த மாதிரி கருத்துகளைத் தேடித் திரியும் பித்தர்களும் இருக்கிறார்கள். அந்தப் பித்தர் கூட்டத்திற்குப் 'பித்தம் தெளிய மருந்துண்டு வாரீர்' என்று அழைப்பு விடுத்து வெளி வருகிறது இந்த நூல்.

நைந்த உள்ளங்கள் பசைபோட்டாற் போல் ஒன்றையொன்று பற்றிக்கொள்ளும். உள்ளம் நைந்தால்தான் பண்படும்; இல்லாவிடின் முரட்டு உள்ளமாகயிருக்கும். வேதனைப்பட்டு, சோதனை தாங்கி, பஞ்சுபோல இருக்கும் உள்ளங்கள்தாம் இந்தப் பேராசிரியர் தரும் மென்மையான - மேன்மையான கருத்துகளைப் புரிந்து காெள்ளும். பேராசிரியர் அ.மு.பரமசிவானந்தம் என்னைப் பற்றிக் கொண்டாரா, நான் அவரைப் பற்றிக் கொண்டேனா தெரியவில்லை. ஆக மொத்தத்தில் சிக்கிக் கொண்டேன், அவர் கருத்துக் குவியலின் வலையில். 'வாழ்க அவர் பணி மென்மேலும். வணக்கம்.


சென்னை,
23–4–94
S.நயனாா் சுந்தரம்