உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரசியல் / 53


ஐரோப்பியர்கள் எந்த உற்சவப்பிரயாணஞ் செய்கின்றார்கள். இந்தியாவில் ஐரோப்பியர் செய்திருக்கும் உபகாரங்களில் இருப்புப்பாதையின் உபகாரமே மிக்க மேலானதென்று உரைக்கவேண்டும்.

காரணம்:- செங்கற்பட்டினின்று சென்னை வந்து சேரவேண்டிய அரிசி மூட்டை வண்டி சேற்றில் விழுந்து சீர்குலைந்துபோக, கள்ளர்கை பட்டுக் கனங்குலைவது காட்சியாம். இந்த சொற்பதூர யாத்திரையில் சீர்குலைந்து சிரச்சேதப்படும் வியாபாரிகள் நெடுந்தூர சரக்குகளைப் பிடிக்கவும் மற்றொரு தேசங்களுக்கு சென்று விற்கவும் எளிதாமோ, எத்தனை வண்டிகள் குடைகவிழ்ந்து ஒடிந்ததும், எத்தனையோ மாடுகள் ஜில்லாக்களில் மடிந்ததும், எத்தனையோ வண்டிக்காரர்கள் புலிகளுக்கும் கரடிகளுக்கும், கள்ளர்கை பலியாயதும் உலகறிந்த விஷயமாம்.

இதுவும் அன்றி வேலூரில் பஞ்சம் உண்டானால் சென்னைக்குத் தெரியாமலும் சென்னையில் பஞ்சம் உண்டானால் வேலூருக்குத் தெரியாமலும் அங்கங்குள்ள ஜனங்களும் கன்றுகாலிகளும் ஆகாரமின்றி அங்கங்கு மடிந்த சங்கதிகளை தப்பிப்பிழைத்தோர் தரணியோரறிய உரைத்திருக்கின்றார்களே. இத்தியாதி இடுக்கங்களையும் அகற்றி இந்தியாவிலுள்ள எல்லோரையும் அரைவயிற்றுக் கஞ்சேனும் குடித்து ஆளாகத் தோற்றவைத்திருப்பது ஆங்கிலேய அரசரருளாம் இருப்புப்பாதையின் சுகமன்றோ.

இத்தகைய நன்றிசெய்த ஆங்கிலேயர்களுக்கு வந்தன வாழ்த்துதல் செய்யவேண்டியதைவிட்டு வாயில் வந்தவாறு வைவது வன்னெஞ்சர் இயல்பாம். ஆங்கிலேயர்கள் இந்தியர்களை வருத்துவதால் ருஷிய ராஜாங்கம் அல்லல்படுவதுபோல் இவர்களும் படுவார்கள் என்று கூறுகின்றார்கள். இதன்விகற்பபேதம் அறியாதோர் இன்னும் என்ன அறியப்போகின்றார்கள் என்று விசனிக்கின்றோம்.

அதாவது எல்லோரும் ஒரேசாதியராயுள்ள உருஷிய தேசத்துள் குடிகளுக்கும் அரசருக்கும் உண்டாயக் கலகத்தைக் கொட்டினவாயில் இரக்கிவிடுவதுபோல் அடக்கிவிட்டார்கள். அங்ஙனமிருக்க இத்தேசத்தை ஆளும் ஆங்கிலேய அரசாங்கத்தார் ஒற்றுமெய்க்கேடாகும் ஆயிரத்தெட்டு சாதிகளை வகுத்துக்கொண்டு அடுப்புக்கட்டைக்குஞ் சாதியுண்டு துடைப்புக்கட்டைக்குஞ் சாதி உண்டு என்போர்களை அடக்குவது வெகு நேரமோ, எளிதில் அடக்கிவிடுவார்கள். ஈதோர் மிரட்டாகாவாம். ஒற்றுமெயின் தகுதியுஞ் செல்வத்தின் மிகுதியும் வித்தையின் தொகுதியும் வெளிப்படையாயின் விவேகிகள் வியந்து நிற்பார்கள். அங்ஙனமின்றி ஒற்றுமெய்க்குறைவு செல்வக்குறைவு வித்தைக் குறைவுள்ள வீணர்கள் தோன்றி விருதாகூச்சலிடுதல் விவேகிகட்கு ஏற்காவாம்.

- 1:52; சூன் 10, 1908 -

சுதேசவிருத்தியை நாடும் நாம் ஒற்றுமெய் விருத்தியை நாடினோமில்லை, விவேகவிருத்தியை நாடினோமில்லை, வித்தைகள் விருத்தியை நாடினோமில்லை. மற்றும் நாம் எவ்விருத்தியை நாடியுள்ளோமென்னில், உன் சாதி சிறிது என்சாதி பெரிதென்னும் சாதிவிருத்திகளை நாடியுள்ளோம். உன்சாமி சிறிது என்சாமி பெரிதென்னும் மதவிருத்திகளை நாடியுள்ளோம்.

இத்தகைய விருத்திகளால் விரோதவிருத்தி பெருகி கல்வியும் கைத்தொழிலும் குறுகி நாளுக்குநாள் சீர்கெட்டு வந்த நாம் கருணைதங்கிய ஆங்கிலேயர்களால் சொற்ப சீர்திருத்தங்களுண்டாய் சுகமடைவதற்குமுன் சுயராட்சிய சுரணை வந்துவிட்டதென்று சூழ்ந்து சூழ்ந்து கூச்சலிடுவது யாது காரணமோ விளங்கவில்லை.

சுரணை என்பதற்குப் பொருள் உணர்ச்சி என்று கூறப்படும். அத்தகைய உணர்ச்சி உண்டாவதற்குக் காரணம் - இவர்கள் பாட்டன்மார்களேனும் பூட்டன்மார்களேனும் அரசாங்கத்தை இழந்திருப்பார்களாயின் புத்திர பௌத்திராதிகளாகிய இவர்களுக்கு அவ்விராஜாங்க சுரணை தோன்றிற்றென்று கூறலாம்.