உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54 / அயோத்திதாசர் சிந்தனைகள்


அவ்வகை ஓர் ஆதாரமுமற்ற கூட்டத்தாருக்கு சுதேச சுரணை வந்துவிட்டதென்று முன்னேறுவது பின்னிடையச்செய்தே கெடும்.

இத்தேசத்திய நூதன சாஸ்திரங்களை வாசிப்போர் க்ஷத்திரியர்கள் யாவரும் பரசுராமனால் நசிந்து பாழடைந்திருக்க எந்த க்ஷத்திரியர்களுக்கு சுதேச சுரணை வந்துவிட்டதென்றும் கேட்பார்கள். இத்தகையக் கேள்விகளுக்கெல்லாம் நமது தலைகாலற்ற பொய் வேதங்களும் பொய்ப் புராணங்களே காரணமாகும்.

அதாவது சிலதினங்களுக்குமுன் நமது கவர்னர் ஜெனரலாயிருந்த கர்ஜன் பிரபு அவர்கள் இந்து தேசத்துக் கலைக்ட்டராக சிவில் செர்விஸ் நடத்தி இவ்விடமுள்ளோர் குணா குணங்களை ஏதேனும் ஆராய்ந்திருப்பாரா. அன்றேல் ஓர் யாத்திரைக்காரராகவேனும் வந்து இத்தேசத்தைச் சுற்றியேனும் பார்வையிட்டு இத்தேசத்தோர் மொழிபேதங்களைப் பார்த்திருப்பாரா, யாதும் கிடையாது. அங்ஙனமிருக்க இந்துக்கள் யாவரும் பொய்யரென்று கூறிய சாட்சி பிரம்மாவின் முகத்தில் பிறந்த பிராமணர்களும் அவர்கள் ஓதுதற்கு தவளை வயிற்றிலும் நாயின் வயிற்றிலும் கழுதை வயிற்றிலும் பிறந்தவர்கள் எழுதிவைத்த வேதங்களும் ஆதாரமாயினும் பொய்சொல்லா அரிச்சந்திரபுராணமே போதுஞ்சான்றாயின.

எவ்வகைத்தென்னில்:- ஆகாயத்தில் தேவர்கள் எல்லோரும் கூடி பூலோகத்தில் பொய்சொல்லாதவன் யார் என்று உசாவியபோது அரிச்சந்திரன் என்னும் அரசனே பொய்சொல்லாதவன் என்று குறிக்கப்பட்டான். அப்போது பூலோகத்தில் அரிச்சந்திரன் ஒருவன் தவிர மற்றுமுள்ள மனுக்கள் யாவரும் பொய்யரென்றே தீர்ந்தார்கள்.

இதன் மத்தியில் கர்ஜன் பிரபுவும் கவர்னர் ஜெனரலாக வந்துசேர்ந்தார். அவர் வந்துள்ள காலத்தில் பொய்சொல்லா அரிச்சந்திரன் ஒருவனும் இல்லாமல் போய்விட்டபடியால் மற்றவர்கள் யாவரையும் பொய்யரென்று சொல்லித் தீர்த்தார். இவ்வகையாக கவர்னர்ஜனரல் கர்ஜன் பிரபு கூறியது பிசகென்பாரேல் தேவர்கள் யாவரும் கூறியது பிசகாகவே முடியும். கர்ஜன் பிரபுவும் பூலோகத்தில் இருப்பவர் தானே என்பாருமுண்டு, அங்ஙனம் கூறுதற்கு ஆதாரம் இல்லை. எங்ஙனமென்னில்:-

பிரம்மாவின் முகத்தில் பிறந்தவர்களுக்கு இந்துதேசமே பூலோகம். அவர்கள் வேதபுராணங்களுக்கும் இந்துதேசமே பூலோகம் பூமிபாரந் தீர்க்கவந்த கிருஷ்ணருக்கும் இந்து தேசமே பூலோகம். பௌத்தர்களை அழிக்க வந்த சங்கராச்சாரிக்கும் இந்துதேசமே பூலோகம். பௌத்தர்களை பழிக்கவந்த அப்பர் சுந்திரர், மாணிக்கருக்கும் இந்துதேசமே பூலோகம். சைனா, சிலோன், பர்மா, மங்கோலியா, தீபேத் மற்றுமுள்ள பௌத்த தேசங்கள் இவர்களுக்குத் தெரியாது. இவர்களை அனுப்பியுள்ள விட்ணு சிவனாந் தேவர்களுக்குந் தெரியாது. ஆதலின் தேவர்கள் யாவரும் இந்துதேசத்தையே பூலோகமாகக் கருதி பொய்சொல்லா ஒருவனைக் கண்டுபிடித்தார்கள்.

மேலோகமாகிய ஐரோப்பாவிலிருந்து கர்ஜன்பிரபு வந்தபோது அப்பொய்சொல்லா அரிச்சந்திரன் ஒருவன் இல்லாமல் போய்விட்டபடியால் இந்துக்களின் தேவர்கள் வாக்கையும் இவர்கள் போக்கையும் கண்டு இந்துக்கள் யாவரும் பொய்யர்கள் என்று தீர்த்துவிட்டுப் போனார் போலும்.

- 2:4; சூலை 8, 1908 -

கடவுளைத் தொழப்போய்க் கலகம், சாமியைத் தொழப்போய்ச் சண்டையுண்டு செய்யும் பொய் வேதங்களும் பொய்ப்புராணங்களுமே இத் தேசத்தோர்களையும் பொய்யர்களாக்கி பாழ்படுத்திவிட்டது.

நமது பாட்டன் பூட்டன் எழுதிவைத்தப் புராணமென்றும், பெரியாச்சாரி சின்னாச்சாரி எழுதிவைத்த வேதமென்றும், கோடம்பாக்கத்தையன், கும்பகோணத்தையன் எழுதிவைத்த இதிகாசம் என்றும் நம்பிக்கொண்டு மெய் பொய் என்னும் பகுப்பற்று சொன்னதைச் சொல்லும் கிளிபோல் சொல்லிக்கொண்டு, விசாரிணை இல்லாமல் இருக்குமளவும் விவேக விருத்தி, வித்தியாவிருத்திகள் அற்ற பொய்யர் என்று தீர்த்தவுடன் பொல்லார் என்று