பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரசியல் / 57


என்று தாழ்த்தி பதிகுலைத்த பரிதாபத்தை நீக்கியிருப்பாரா. சுத்த ஜலங்களை மொண்டு குடிக்கவிடாமல் சுகக்கேட்டை உண்டு செய்து மடிய வைப்பவர்களுக்கு அறிவூட்டி அவர்கள் கருணையற்ற செயலை மாற்றியிருப்பாரா. அம்மட்டர்களை சவரஞ் செய்யவிடாமலும் வண்ணார்களை வஸ்திரமெடுக்க விடாமலுஞ் செய்து அசுத்த நிலை அடையவும் அதின் குறையால் மடியவுஞ் செய்பவர்களுக்கு மதியூட்டி ஏழைகளையீடேற்றி இருப்பாரா. பார்ப்பான் பணம் சம்பாதிக்கப்போகும் இடங்களில் எல்லாம் சாதியாசாரங் கிடையாது. பறையன் பணஞ் சம்பாதிக்க போகும் இடங்களில் எல்லாம் சாதியாசாரம் உண்டென்று கூறி அவர்களைத் தலையெடுக்கவிடாமல் கெடுத்து சீரழிப்பதை ஏதேனும் தடுத்து இரட்சித்திருப்பாரா.

இத்தேசத்தில் நூதனமாக ஏற்படுத்திவிட்ட சாதிகஷ்டத்திற்கும், இழிவுக்கும் பயந்து பலதேசங்களுக்குப்போய் வீண் கஷ்ட நிஷ்டூரங்களை அடைய வேண்டாம் இதேதேசத்தில் உங்களுக்கு வேண்டிய பூமியும் பணமும் கொடுத்து ஆதரிக்கின்றோம் பூமிகளைப் பண்படுத்தி தானியத்தை விருத்தி செய்யுங்கோளென்று கூறி வெளிதேசம் போகும் ஏழைகளைத் தடுத்து ஆதரித்திருப்பாரா.

ஐந்து ரூபாய் கடன் கொடுத்துவிட்டு ஆறுமாதகாலம் வேலைவாங்கிக் கொள்ளுவதும், அரைபடி நெல்லை அளந்துகொடுத்து ஒருநாள் முழுவதும் வேலை வாங்கிக் கொள்ளுவதுமாகிய படுங்கஷ்டத்தால் எலும்புந்தோலுமாய் ஈனதிசை அடைவோர்களை யீடேற்றியிருப்பாரா.

தங்கள் அரசாங்கங்களும் நசிந்து குருபரம்பரையையும் இழந்து கோவில் குளங்களும் அழிந்து திராவிட பெளத்தாளென்னும் பெயரும் மறைந்து பறையனென்னும் பெயரால் இழிந்துள்ள ஒருவன் ஏதோ சொற்ப பூமியும் கன்று காலியம் வைத்துக்கொண்டு கிஞ்சித்து சுகத்திலிருப்பானாயின் ஆ, ஆ, பறையன் நமக்கு முன்பு மேலான அந்தஸ்தில் வாழ்வதா என்னும் பொறாமெய்கொண்டு இரவுக்கிரவாய் அவன் பயிறுகளையும் கன்று காலிகளையும் அழித்து அவனையும் ஒழிக்க முயலும் சாதிகர்வம் உற்றோருக்கு சாந்தங்கூறி ஒருவருக்கொருவரை சமரசஞ் செய்திருப்பாரா, இல்லையே.

இத்தகைய சாதிமுடுக்குகளுஞ் சமய இடுக்கங்களுமற்ற நாடுகளாகும் வங்காளம், பம்பாய் முதலிய இடங்களில் பிரிட்டிஷ் இராஜாங்கத்தார் குடியேறி கல்விவிருத்தி கைத்தொழில் விருத்திகள் செய்தது முதல் ஒவ்வொரு குடிகளும் சீருஞ் சிறப்பும் பெற்று மாடமாளிகைகளும் கூட கோபுரங்களும் கட்டி சுகவாழ்க்கை பெற்றதுடன் பஞ்சி இயந்திரசாலைகளும், இரும்பியந்திரசாலைகளும், பீங்கானியந்திரசாலைகளும், கண்ணாடி இயந்திரசாலைகளும் மற்றும் விருத்திகளுமடைந்து ஏழைகள் யாவரும் கனவான்கள் என்று எண்ணுங்காலம் நேரிடும்போது அவரவர்கள் தீவினைக்கீடாய் பிளைக்கென்னும் பெரு மாறி தோன்றி பாழாக்கியதற்கு உதவியாய் சீர்கேடர்கள் சிலர் தோன்றி உள்ள சீரையுஞ் சிறப்பையும் கெடுத்தற்கு மத்தியில் எழுந்து குடிகளுக்கும் இராஜாங்கத்தோருக்கும் இருந்த அன்னியோன்னியங்களை கெடுத்து வீண் விரோதங்களை உண்டு செய்து வருகின்றார்கள்.

இத்தகைய விரோதச்செயலை நாளுக்குநாள் உணர்ந்துவரும் இராஜாங்கத்தார் பிளைக்கென்னும் பெருமாளிக்கு மூலமெஃதென்று அறிந்து முறித்து நாளுக்குநாள் நசித்து குடிகளுக்கு சுகத்தை உண்டு செய்து வருவதுபோல் குடிகளுக்கும் இராஜாங்கத்திற்கும் வீணேவிரோதத்தை வளர்ப்பதற்கு மூலாதிபர்கள் யார் யாரென்றறிந்து இரும்பைக்கொண்டே இரும்பை கடைத்திரட்டல் போல் சீர்திருத்த சுதேசிகளாம் நியாயாதிபதிகளையும் ஜூரிகளையுங்கொண்டே சீர்கேடராம் சுதேசிகளை அடக்கி குடிகளுக்கு சுகத்தைக் கொடுத்துவருகின்றார்கள்.