பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68 / அயோத்திதாசர் சிந்தனைகள்


அமிதவாதத்தையும் விட்டு அரசாங்க விசுவாசமே ஆனந்தம் என்று கூறி வெளிவருகின்றார்கள்.

இஃது யதார்த்த இராஜவிசுவாசம் ஆகுமோ, ஒருக்காலும் ஆகா. இவைகள் யாவும் சமயயுக்த்தம்), சமயதந்திரம், சமயோபயோகசாராங்களேயாகும். இத்தகைய யுக்த்தியால் நந்தேயம் ஒருக்காலும் சீர்பெறமாட்டாது.

சுவற்றை வைத்துக் கொண்டு சித்திரம் எழுத வேண்டும் என்னும் பழமொழிக்கிணங்க நம்மை வித்தையிலும், புத்தியிலும் சீர்திருத்தி சகலவிஷயங்களிலும் சுகமுற்று வாழச் செய்துவரும் பிரிட்டிஷ் ராஜாங்கமே இவ்விடம் நிலைத்திருக்கவேண்டிய ஆதாரங்களை முன்பு தேடிக்கொண்டு ஆங்கிலேய வித்தியா புருஷர்களில் ஒவ்வொருவரைக் கைத்தொழிற்சாலை அதிபதிகளாகவும், இயந்திரசாலைகள் அதிதிகளாகவும் நிருமித்து சீர்திருத்த காரியாதிகளைச் செவ்வைச் செய்வோமாயின் நம்முடைய தேசத்து செம்மறியாடுகள் அவர்கள் மேய்ப்புக்கடங்கி சகல காரியாதிகளுக்கும் ஒடுங்கி வித்தைகளில் விருத்தி பெறுவார்கள்.

அங்ஙனமின்றி ஆங்கிலேயர் துரைத்தனத்தையும் அழித்துவிட்டு ஆங்கிலேயர்களையும் துரத்திவிட்டு ஆட்சி செய்யலாம் என்று எண்ணுவார்களாயின் அவன் சாதிக்கு நான் தாழ்ந்தவனோ, இவன் சாதிக்கு அவன் தாழ்ந்தவனோ, உவன் சாதிக்கு அவனுயர்ந்தவனோ என்னும் சாதி கர்வத்தினாலும், என்சுவாமியைவிட, அவன் சுவாமி பெரிதோ அவன் சுவாமியைவிட என்சுவாமி சிறிதோ என்னும் மதகர்வத்தினாலும், என்னைவிட அவன் அதிகங்கற்றவனோ அவனைவிட இவன் அதிகங்கற்றவனோ என்னும் வித்தியா கர்வத்தினாலும், என்னிலும் அவன் அதிகபணக்காரனோ, அவனிலும் இவன் அதிகப் பணக்காரனோ, என்னும் தனகர்வத்தினாலும் ஒருவன் வார்த்தைக்கு மற்றொருவன் அடங்காமலும், மற்றொருவன் வார்த்தையை சிற்றறிவோன் கற்காமலும், வித்தியாவிருத்திகளைப் பெருக்காமலும் ஒவ்வொருவருக்குள்ள சாதிபேத சமய பேதங்களால் விரோதசிந்தையையே பெருக்கி வித்தையும் புத்தியும் கெட்டு வீணே சீர்கெடுதலாகும்.

- 2:16; செப்டம்பர் 30, 1908 -

இன்னும் அவற்றிற்குப் பகரமாய் நமது தேசமாகிய இந்தியாவிலிருக்கும் ஜனத்தொகை ஏறக்குறைய முப்பது கோடியேயாகும்.

இம்முப்பதுகோடி ஜனங்களுள் நூற்றிற்கு 97 - பெயர் வாசிப்பறியாதவர்கள். இவற்றுள் புருஷருக்குள் 10 - பெயரில் ஒருவருக்கும், இஸ்திரீகளுக்குள் 150 - பெயர்களுக்குள் ஒருவளுக்கும் கல்வி பயிற்சி இருப்பதாக விளங்குகின்றது.

இத்தகைய கல்விபயிற்சியில் வித்தியாவிருத்தி கல்வியிலிருப்பவர்கள் நூற்றிற்கு ஒருவரும் உலக விருத்திக் கல்வியிலிருப்பவர்கள் ஆயிரத்தில் ஒருவரைக் காண்டலும் அறிதேயாகும்.

சீர்சிறந்த ஜப்பானியரை நோக்குகையில் கல்வி பயிற்சியிலுள்ளவர்கள் புருஷர்கள் நூற்றிற்கு தொண்ணூற்றொருவரும், இஸ்திரீகள் நூற்றிற்கு எழுபத்தொன்பது பேருமாக விளங்குகின்றார்கள்.

அமேரிக்கா முதலிய தேசத்தவர்களோ அதனினும் பெருந்தொகை உடையவர்களே யாவர்.

இவற்றுள் ஓர் மனிதனுக்கு அறிவுவிருத்தி பெறவேண்டுமாயின் முதலாவது கல்வி விருத்தி வேண்டும். அதற்கு உதவியாய் செல்வ விருத்தி வேண்டும். இவ்விரண்டும் உண்டாயின் வேண்டியவிருத்திக்கு ஆளாவான்.

நம்முடையதேசத்தவர்களுள் ஆயிரங் குடிகளை வட்டியால் அர்த்தநாசஞ் செய்து ஆயிரத்தில் ஒருதனவந்தர் விளங்குவார்.

ஐரோப்பா, அமேரிக்கா முதலிய தேசத்தவர்களோ மின்சாரத்தாலும், புகைரதத்தாலும், தந்திகள் சங்கதியாலும் ஆயிரங் குடிகளுக்கு ஆனந்த உபகாரஞ் செய்து ஆயிரத்துள் நூறு தனவந்தர்கள் தோன்றுகிறார்கள்.

இத்தகைய வித்தையிலும் புத்தியிலும் சிறந்தவர்களாக இருப்பதுமன்றி புருஷர்களும் இஸ்திரீகளும் கல்வி விருத்திப் பெற்று விவேகிகளாக