அரசியல் / 69
விளங்குகின்றார்கள்.
அவ்விவேக மிகுதியால் அவர்கள் செய்யும் அரசாங்கமானது தன்னவரன்னியரென்னும் பட்சபாதமில்லாமலும், தன்னாடு புறநாடென்னும் களங்கமில்லாமலும் சீர்திருத்தி சிறப்புறச் செய்துவருகின்றார்கள்.
நமது தேசத்திலுள்ள சில சாதியோர் தங்கள் சுயப்பிரயோசனங்களுக்காய் யாவரையும் கல்வி கற்கவிடாத ஏதுக்களைச் செய்துவந்ததுமன்றி இஸ்திரீகளுக்குக் கல்வியின் சப்தமே கேட்கவிடாது செய்துவிட்டார்கள்.
காரணம் யாதென்பீரேல் இத்தேசத்து பேதை மக்களுக்குத் தாங்களே உயர்ந்தசாதிகள் என்றும் தாங்களே சுவாமிகள் என்றோதி வஞ்சித்துப் பொருள் பறித்து தின்றவர்களாதலின் ஏனைய மக்கள் கல்விகற்றுக் கொள்ளுவார்களாயின் தங்களது வஞ்சகக் கூற்று விளங்கிவிடுவதுமன்றி தங்கள் சுகசீவனத்திற்கும் கேடுண்டாகும் என்று எண்ணி சகலருக்கும் கல்வி விருத்தி பெறக்கூடா தடைகளையே செய்துவந்தார்கள்.
அத்தகைய இடுக்கத்தால் புருஷர்களில் நூற்றிற்கு ஒருவனையும், இஸ்திரீகளில் ஆயிரத்துள் ஒருத்தியையும் கல்வி கற்றவர்கள் என்று கூறுதற்கு ஆதாரம் இல்லாமல் போயது.
அக்காலத்தில் கருணைதங்கிய பிரிட்டிஷ் ராஜாங்கம் வந்து தோன்றி ஆங்கிலேய மிஷநெரி பாதிரிகளின் நன்னோக்கத்தால் எங்கும் கலாசாலைகளை ஏற்படுத்தி கல்விவிருத்தி செய்வதனால் புருஷருள் நூற்றிற்கு பத்து பெயரும், இஸ்திரீகளுள் நூற்றிற்கு ஒருத்தியும் கல்வி கற்றவர்கள் என்று சொல்லவும், கேழ்க்கவும் வெளிவந்து வித்தியாவிருத்தி செய்கின்றார்கள்.
இத்தகைய சொற்பக்கல்வியைக் கற்றவுடன் தீட்டியமரத்தில் கூர்பார்ப்பதுபோல் செய்நன்றியை மறந்து சுயராட்சியம் கேழ்க்க வெளிவந்தது சூன்யவிருத்தி என்னலாகும்.
அதாவது - தற்கால கல்விவிருத்தி பெற்றுள்ளோர் கணக்கின்படிக்கு சுயராட்சியமென்னும் வார்த்தையின் (பொருளறிந்தோரை) நூற்றிற்கு ஒருவரையேனும் காண்பதரிது.
- 2:17: அக்டோபர் 7, 1908 -
சுதேசம் என்னும் வார்த்தையின் பொருளும், சுயராட்சியம் என்னும் வார்த்தையின் பொருளும் தெள்ளற விளங்காதப் பெருந்தொகையார் வசம் இராட்சியபாரம் ஏற்றுவதானால் அவர்கள் தாங்குவரோ.
அவ்வகை ராட்சியபாரத்தைத் தாங்கச் செய்து தன்னவர் அன்னியரென்னும் பேதமில்லாமல் நடத்தும் களங்கமற்ற நெஞ்சினர் களிருக்கின்றனரோ. அன்னோரையும் காண்பதரிது.
இத்தகைய சுயராட்சியம் கேட்போர் வசம் இந்துதேசத்தை அளித்த பின்னர் தற்காலம் ஐதிராபாத்தில் நேரிட்ட துக்கசம்பவம் உண்டாகி இருக்குமாயின் இச்சுதேசிகள் என்போர் யாது உதவி செய்திருப்பர்.
அவனென்னசாதி இவனென்னசாதி அவனென்ன சமயம் இவன் என்ன சமயம் என்றுக் கேட்டுக் கொண்டே சுயநலம்நாடி ஓடியிருப்பார்கள்.
அதற்குப் பகரமாய் தற்கால ஐதிராபாத்து விபத்தில் ஓர் இந்து மனிதனிருந்து ஆதரித்தான் என்னும் வதந்தியும் கிடையாது. இந்துக்கள் விஷயமாக எழுந்த வதந்திகள் யாதென்னில் செக்கின்றாபாத்திலும் ஜலம் பெருகிவிடும் என்று பயந்து தங்கள் சொத்துக்களை சுருட்டிக் கொண்டு அவர்கள் முன்வாசதேசஞ் சென்று விட்டார்கள் என்பதேயாம்.
பிரிட்டிஷ் ராஜாங்க ஆங்கிலேயர்களோ எனில் தங்கள் பிராணனையும், சொத்துக்களையும் ஓர் திரணமாகக் கருதி ஜலத்தில் இறங்கி மனிதசீவர்களையும், மிருக சீவன்களையும் காப்பாற்றி கரைசேர்த்திருக்கின்றார்கள்.
இவ்வகை ஆபத்து பந்துவாக விளங்கிய ஆங்கிலேயருள் சிலர் ஏழைகளைக் கார்க்க முயன்று நீரிலிறங்கி அவர்களும் காணாமலிருப்பதாகத் தெரிகின்றது.