உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70 / அயோத்திதாசர் சிந்தனைகள்


இத்தகைய சுத்தவீரமும், உத்தமகுணமும் வாய்த்த பிரிட்டிஷ் ராஜாங்கத்தை ஓட்டிவிட்டு சுத்தவீரமற்ற அதமகுணத்தோர் ஆளுவோம் என்பது அந்நியாயமேயாகும்.

ஏகமதம், ஏகசாதி, ஏகபாஷையுடைய ஓர் தேசத்தையாளும் அரசனுக்குள்ள கஷ்டநிஷ்டூரங்களையும், இராஜகீயச் செயல்களையும், மந்திராலோசனைப் பெருக்கல்களையும் உய்த்துணர்வோமாயின் பலமதம், பலசாதி, பாஷை பெருத்த தேசக்குடிகளை எத்தகையாலாண்டு சாட்சியாபாரம் தாங்குவோம் தாங்கமாட்டோம் என்னும் பகுப்பு தெள்ளற விளங்கும்.

இங்குள்ள மதபேத விரோதங்களையும், சாதிபேத விரோதங்களையும், பாஷைபேத விரோதங்களையும், இவர்களை ஒற்றுமெய்ப்படுத்தியாளும் இராஜகீயங்களையும், மந்திராலோசனைகளையும் நன்காராய்வோமாயின் தற்காலம் நம்மை ஆண்டுவரும் பிரிட்டிஷ் ராஜாங்கமே பிதுரு மாதுருக்கு ஒப்பானதென்றும், அவர்களே தற்கால தன்மதேவதைகள் என்றும், அவர்களே நமது ஆபத் பந்துவுமென்றெண்ணி அவர்கள் இராஜகீயமே நிலைக்கத்தக்க எதுக்களைத் தேடி அவர்கள் உத்தம குணத்திற்குத் தக்கவாறு நாமும் உத்தமகுணத்தினின்று காரியாதிகளை நடத்தி வருவோமாயின் சகலரும் சுகமடையலாம்.

கருணைதங்கிய பிரிட்டிஷ் ராஜாங்கத்தார் தங்கள் ஆங்கில பாஷையையே ஒவ்வொருவரையும் வாசிக்கச்செய்து அப்பாஷையிலேயே சகல காரியாதிகளையும் நடத்திக் கொண்டுவருகின்றார்கள்.

அதினாற் சகல பாஷையோரும், சகலமதத்தோரும், சகலசாதியோரும் அதனைக் கற்று யாதொரு பேதமுமின்றி இராஜகீயகாரியாதிகளை நடாத்திவருகின்றார்கள்.

அத்தகைய காரியாதிகள் நிறைவேறுவதில் சுதேசிகளின் கர்மங்களினால் சுதேசிகளுக்கு இடுக்கண்கள் உண்டாய் வாதைப்படுகின்றார்களன்றி ஏனைய ஆங்கிலேயர்களால் யாதோர் இடுக்கண்களும் கிடையாது.

கவர்ன்மென்றாபீசுகளிலும், முநிசபில் ஆபீசுகளிலும், வைத்தியம் சாலைகளிலும், இரயில்வே உத்தியோகங்களிலும் உள்ள சுதேசிகள், சுதேசிகளுக்குச் செய்துவரும் இடுக்கண்களையும் இச்சுதேசிகளுக்கு கருணைதங்கிய ஆங்கிலேயர் செய்துவரும் சுகங்களையும் கண்டு எழுதுவோமாயின் விரியும் என்று அஞ்சி விடுத்திருக்கின்றோம்.

அவ்வுத்தியோகங்களில் இல்லாத வியாபாரிகளும், பயிரிடும் தொழிலாளரும், கைத்தொழிலாளிகளும் இவற்றைக் கவனிப்பார்களாயின் சுதேசிகளுக்கும், கொடுத்திருக்கும் பெரும் உத்தியோகங்கள் யாவற்றையும் ஆங்கிலேயர்களுக்கு அளிப்பதே ஆனந்தம் என்று கூறுவார்கள்.

அதாவது சுதேசிகள், சுதேசிகள் எனக் கூறிக்கொண்டு சுயப்பிரயோசனத்தை நாடுவதினாலேயாம்.

தன் சுகத்தை நாடாது பிறர் சுகத்தை நாடுவது உத்தமம்.

தன் சுகத்தையும் பிறர் சுகத்தையும் நாடுவது மத்திமம்.

தன் சுகத்தையே நாடி பிறர் சுகத்தைக் கெடுப்பது அதமம்.

- 2:18; அக்டோபர் 14, 1908 -

சுதேசியக் கூட்டத்தாருள் சுயநல சுதேசிகளும், பிறநல சுதேசிகளும், பொதுநல சுதேசிகளுமாக விளங்கி எடுத்த விஷயங்களால் யாவும் சுயநலமாகவே தோன்றும் போலும்.

காரணம் - பச்சையப்பன் தன்மநிதியின் விஷயமாய் தற்கால அட்வகேட் ஜெனரல் யோசித்துள்ள டிரஸ்ட்டிகளின் நியமனம் சரியல்ல என்று உள்ள டிரஸ்ட்டிகளும், ரெவினியூ போர்டாரும் தடுத்திருப்பதாகத் தெரியவருகின்றது.

அவர்களின் உத்தேசம் யாதெனில் - அட்வகேட் ஜெனரலின் அபிப்ராயப்படி டிரஸ்டிகளை நியமிப்பதானால் பிராமணர்களே பெருந்தொகையாகச் சேர்த்துக்கொண்டு மற்ற வகுப்பார்களுக்குத் தன்மந் தடைப்படும் என்பதேயாம்.