உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரசியல் / 85


அவ்வகை மதிப்பைக் கொண்டே நமது பிரிட்டிஷ் ராஜாங்கத்தோரும் இந்தியாவின் தலைநகராக வைத்து வங்காளத்தை ஆண்டு வருகின்றார்கள்.

இத்தகைய தேசசிறப்பையும், தேசத்தோர் மதிப்பையும் குறைக்க ஏற்பட்ட குண்டர்கள் சிலர் வெடிகுண்டுகளை இருப்புப்பாதைகளில் எறிவதும், அன்னியதேச சரக்குகளை வைத்து விற்பவர்களின் கடைகளைக் கொளுத்துவதும் கூத்தாட்டங்களில் ராஜதுரோகப் பாட்டுகளைப் பாடுவதுமாகிய துன்மார்க்க வழிகளில் நடந்து நன்மார்க்க வழியிலுள்ளக் குடிகளை நாட்டை விட்டோட்டிக் கொண்டு வருகின்றார்கள்.

இத்தகைய துஷ்டர்கள் செய்யும் கஷ்டச் செயல்களுக்கு அஞ்சி விவேக மிகுத்தவர்களும், பெருந்தகமெயோர்களும் ஒவ்வொருவராய் ஊரைவிட்டு மற்றோரூர்களுக்குக் குடியேறிவிடுவார்களாயின் துஷ்டச் செயல்களுள்ளவர்கள் யாவரும் யாது செய்யக்கூடும். கஷ்டமிகுத்துக் கண் கலங்க வேண்டியதேயாம்.

சுஜாதிய அபிமானமேனும் பாராது கடைகளை சுட்டெறிப்பதும், வெடிகுண்டுகள் எறிவதும் இராஜதுவேஷப் பாட்டுகள் பாடுவதுமாகிய செயல்கள் அவரவர்களையே அழித்து அல்லல் அடையச் செய்யுமேயன்றி அரசாங்கத்தை ஒன்றும் அசைக்கமுடியாது.

இதையடக்குவதற்கென்றே இன்னும் அரசாங்கம் மேலும் மேலும் வலுவுபெறுமேயன்றி அவர்கள் சோர்வடைந்து சுயராட்சியம் அளிக்கப் போகிறதில்லை.

குண்டுமருந்துடன் எதிரெதிர் போர்புரிந்த காலத்தில் அஞ்சாது அடக்கி ஆண்டுகொண்ட அரசாங்கத்தார் பதுங்கி பதுங்கி குண்டுயெறிவோர்களுக்கு பயப்படுவார்களோ ஒருக்காலும் பயப்படமாட்டார்கள்.

இத்தகைய வஞ்சகச் செயல்களால் ஒருக்காலும் தேசஞ் சீர்பெறமாட்டாது. நேரான வழியிலும், சீரான நடையிலும் சுகம்பெறக்கூடும்.

இவற்றை உணராது ஒருவன் இராஜதுரோகச் செயலை செய்வானாயின் அவனுக்கு இன்னும் உச்சாகம் உண்டாக்கத்தக்கச் செயல்களை ஊடே உதவி செய்தல் மிக்க அக்கிரமமேயாகும்.

இராஜதுவேஷிகளுக்கு மதிகூறி அவர்களது துன்மார்க்கச் செயல்களைத் தவிர்த்து நன்மார்க்கத்தில் நடைபெறச் செய்வார்களாயின் அவர்களல்லல் நீங்கி ஆனந்தமடைவதுடன் மதிசொல்லுவோர்களும் மகிழுற்று மனப்பேரின்பம் அடைவார்கள்.

ஒவ்வொரு மக்களுந் துக்கத்தை அகற்றி சுகத்தைக் கருதுவது இயல்பாகும். அத்தகைய சுகத்தைக் கருதாது நமது வங்காளசோதிரர்களில் சிலர் நாளுக்குநாள் துக்கத்தையும், பயத்தையும் உண்டு செய்துக் கொண்டு பதுங்கித் திரிவது பாழுக்கிடமாகும். வஞ்சநெஞ்சத்தை அகற்றி வாழ்வதே வாழ்க்கை சுகமாம்.

- 2:26; டிசம்பர் 9, 1908 -


28. தாலிக்கட்டினால் மட்டும் விவாகம்போலும்

இத்தேசத்திலுள்ளோர் சிலர் ஓர் இஸ்திரீயைத் தாலிகட்டினால் மட்டிலும் அது விவாகமென்றுந் தாலிக்கட்டாவிடில் அஃது விவாகமன்றென்றும்,

ஓர் இந்து மற்றோர் மத இஸ்திரீயை விவாகஞ்செய்யமுடியாதென்றும் கூறுவது மிக்க ஆட்சரியமேயாம். அதாவது இந்துக்கள் வகுத்துள்ள எட்டுவகை விவாகங்களில் காந்தருவவிவாகமானது எந்ததேசம், எந்தபாஷை எந்தசாதியோராயிருப்பினும் புருஷனும், இஸ்திரீயும் சம்மதித்துக் கூடிக்கொள்ளுவார்களாயின் ஓர்விவாகமென்றே வகுத்திருக்கின்றார்கள்.

அங்ஙனமிருக்க தாலிகட்டாவிட்டால் விவாகமல்ல என்றும், ஓர் இந்துவானவன் மற்றோர் மத இஸ்திரீயை விவாகஞ்செய்ய முடியாதென்றுங் கூறுவது எட்டுவகை விவாகங்களுக்கும் மாறுபட்ட விவாதம்போலும்.