அரசியல் / 87
அதாவது சென்னை ராஜதானியைச் சார்ந்த கிராமங்களில் சகலருக்கும் பொதுவாயுள்ள கிணறு, குளங்களில் சுத்தஜலங்களை மொண்டு குடிக்கவிடாமல் சேறும் நீரும் அருந்தி சாகச்செய்யும் இடுக்கங்களை நீக்கும்படிச் செய்யுங்கள். கிராமங்களிலுள்ள அம்மட்டர்களை சவரஞ்செய்யவிடாமல் தடுத்து ரோமரிஷிகளாக்கிவிடும், இடுக்கங்களைத் தவிர்த்து குடிம்பிகளாக்கி வையுங்கள்.
கிராமங்களிலுள்ள வண்ணார்களை வஸ்திரமெடுக்கவிடாமல் செய்து தங்களைப்போல் அவர்கள் சுத்தமாகவும், நாகரீகமாகவும் வரவிடாமல் செய்யும் இடுக்கங்களைத் தவிர்த்து சுதேசிகளாக உலாவச் செய்யுங்கள்.
அடிமைகளாக அடக்கி வைத்துக் கொண்டு அரைவயிற்றுக் கஞ்சேனுங் கொடாமல் அழிக்கும் இடுக்கங்களைத் தவிர்த்து வயிறாறப் புசிப்பளிக்கச் செய்யுங்கள்.
இத்தேசத்து தன்மத்திற்குப் பராய தீன்மம், புத்ததன்மமென்றும், இத்தேசத்து சாதிகளுக்குப் பராயசாதி பறைசாதியென்றும் வகுத்துக் கொண்டு புத்ததன்மத்தைப் பராயதன்மமென்றும் பௌத்தர்களைப் பறையர்கள் என்றும் தாழ்த்தி தலையெடுக்கா இடுக்கஞ்செய்வதைத் தவிர்த்து புத்ததன்மந்தான் இத்தேசத்தின் யதார்த்த பூர்வதன்மமென்றும், பறையர்கள் என்று அழைக்கப்படுவோர்கள்தான் இத்தேசத்தின் பூர்வ பெளத்த குருக்களும், பௌத்த அரசர்களும், பௌத்த குடிகளுமாக விளங்கினோரென விளக்கிவிடுவீர்களாயின் இதுவே பேருபகாரமுமாகும். இதுவே விவேகமிகுத்தக் கூட்டத்தார் செய்யாமல் செய்த உதவியுமாகும்.
2:27; டிசம்பர் 18, 1908 -
30. பாதிரிகளுக்கோர் விண்ணப்பம்
பாதிரிகளென்பவர்களுள் கத்தோலிக்குப் பாதிரிகளென்றும், பிரோட்டெஸ்டன்ட் பாதிரிகளென்றும் இருவகுப்பார் உண்டு.
அவற்றுள் பாதிரியென்னும் மொழியானது பாதர், பிதா, தந்தை என்னும் சிறப்புப்பொருள் பெற்று பாதிரி, பாதிரியென்னும் மொழி மயங்கி திரிகின்றது.
ஆயினும் அப்பாதிரியென்னும் மொழியை எமது பாதர், தந்தையென்றே கொண்டு யாமோர் மைந்தனாக நின்று விளக்கும் இவ்விண்ணப்பத்தை விரோதமாகக்கொள்ளாது அவிரோதத்தில் நோக்கி ஆதரிக்கும்படி கோருகிறோம்.
இவற்றுள் முதலாவது கத்தோலிக்குப் பாதிரிகளுக்கு விண்ணப்பிக்கின்றோம். போதியின் சார்பாய் தோன்றிய பாதர்களே, கிறீஸ்து பிறந்த நூற்றாண்டுகளுக்குப்பின்பு நூதனமாக குடியேறி தங்களுக்குத் தாங்களே பிராமணன் என்று சொல்லிக்கொண்டு வஞ்சக சீவனம் செய்துவந்த காலத்தில் அவர்களைக் கண்டித்தும், வேஷபிராமணச் செய்கைகளை விளக்கி ஊரைவிட்டுத் துறத்தியும் வந்த சுதேசிகளான சாதிபேதமற்ற திராவிடர்களை வேஷபிராமணர்கள் விரோதிகளாகவே உள்ளத்தில் மேற்கொண்டதிலிருந்து கல்விக்குறைவு, விசாரிணைக் குறைவும் உள்ள சிற்றரசர்களையும், பெருங் குடிகளையும் தங்கள் வசப்படுத்திக் கொண்டு தங்கள் வேஷ செயலுக்கும், பொய்க் கதைகளுக்கும் இசையாமல் பராயர்களாயிருந்து வேஷ பிராமணச் செயல்களையும், குடியேறிய காலங்களையும் நாணமற்ற நடைகளையும் மற்றக் குடிகளுக்கு பறைந்து தெளிவுண்டாக்கி வந்தவர்களைப் பறையர்கள் என்றும், சாம்பான்கள் என்றும், வலங்கையர்கள் என்றும், தாழ்ந்தசாதிகள் என்றும் கூறி பழைய விரோத சிந்தையைப் பதியவைத்து கொண்டு தங்களுக்கு அதிகாரமும் பொருளும் செல்வாக்கும் மிகுந்தவுடன் நாடுகளிலும், நகரங்களிலும் இவர்களைத் தங்கவிடாமலும் தரிக்கவிடாமலுந் துறத்திப் பலவகைத் துன்பங்களால் கொன்றும், வதைத்தும் வந்தார்கள்.