பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108 / அயோத்திதாசர் சிந்தனைகள்



47. சிறப்புற்று ஓங்கும் நமது சக்கிரவர்த்தியாரவர்கள் அமுதவாக்கும் அதனை முற்றுந்தழுவாத மகாகனந்தங்கிய லார்ட்மார்லியவர்களின் போக்கும்

இந்து தேசசக்கிரவர்த்தியாய் நம்மையாண்டு வரும் ஸ்ரீமான் ஏழாவது எட்வர்ட்பிரபு அவர்கள் தனது பூரணக் கருணையால் இந்து தேசத்தில் இடியுண்டிருக்கும் ஏழைக்குடிகளை முன்பு சீர்திருத்தி சகல விஷயங்களிலும் சமரசநிலைக்குக் கொண்டுவந்தப்பின்பு இந்துக்களுக்கு சிற்சில அதிகாரநியமனங் கொடுக்கவேண்டும் என்னும் உத்தேசம் உடையவராய் லார்ட்மார்லியவர்களின் பிரேரேபனைக்கு முன்பே தனதபிப்பிராயத்தை வெளியிட்டிருக்கின்றார்.

சக்கிரவர்த்தியார் கருணை நிறைந்த அமுதவாக்கை லார்ட் மார்லியவர்கள் கவனியாமல் இந்து தேசத்திலிருந்து கமிஷன் விஷயமாகப் பல வகுப்பார் அநுப்பியிருக்கும் விண்ணப்பங்களைக் கருணைகொண்டு ஆலோசியாமலும், தனது விசாரிணைக்கெட்டிய வரையில் இந்துதேசத்தில் வாசஞ் செய்பவர்கள் யாவரையும் இந்துக்கள் என்ற எண்ணம் கொண்டு நூதனசட்டங்களை நிரூபிக்க ஆரம்பித்துக் கொண்டார். அத்தகைய எண்ணம் கொண்டவர் இந்துதேசத்தில் வாசஞ்செய்யும் மகமதியர்களையும் இந்துக்களாக பாவிக்காது மகமதியர்கள் வேறு இந்துக்கள் வேறு என்று பிரிக்க ஆரம்பித்துக் கொண்டார். ஆனால் இந்துக்களுக்குள் இடிபட்டு நசிந்துவரும் முக்கிய வகுப்பாரைக் கவனித்தாரில்லை. லார்ட் மார்லியவர்கள் இந்து தேசத்துள் வந்து இந்துக்களுடன் பழகி ஒவ்வொரு வகுப்பார்களின் குணாகுணங்களையும் நன்காராய்ந்திருப்பாராயின் சாதிபேதம், சமய பேதம், பாஷை பேதம், குணபேதம் நிறைந்துள்ள இந்துக்களை பேதமற்றவர்கள் போலெண்ணி இந்துக்களில் ஒருவரை எக்சிகூட்டிவ்மெம்பரில் சேர்க்கலாம் என்னும் அவசர வாக்களித்திருக்கமாட்டார்.

ஈதன்றி கமிஷனென்று வெளிவந்த சட்டத்தை கொண்ட எண்ணப்படி குறிப்பிடாமல் சாதிபேதம் நிறைந்துள்ளவர்கள் வசம் எக்சிகூட்டிவ் மெம்பர் அலுவலை நியமிக்குஞ் சட்டத்தை ஆலோசித்தபடியால் இந்தியர்களின் குணாகுணங்களை அறிந்தோர்களும் பார்லிமெண்டு மெம்பர்களுமாகியக் கனவான்கள் தற்கால பார்கலி மெண்டில் லார்ட் மார்லியவர்களின் அபிப்பிராயத்திற்கு மறுப்புக் கூறும்படி ஆரம்பித்துக் கொண்டார்கள்.

மறுப்புகளுக்கு எல்லாம் காரணம் இந்து தேச சாதிபேத சமயபேதங்களேயாகும். இந்தசாதி பேதவிஷயங்களினால் ஒருவனை என்னசாதி என்று கேட்பார்களாயின் அவன் தன்னைப் பட்டரசாதி, முட்டரசாதி, கொட்டரசாதி என ஏதேனும் ஓர் பெயரைச் சொல்லிவிடுவானாயின் அவனைப் பெரிய சாதிகளைச் சேர்ந்தவன் என்று தங்களுக்குள் சேர்த்துக் கொள்ளுவார்கள்.

சாதிபேதமில்லா திராவிடன் ஒருவனைப் பார்த்து நீவிரென்ன சாதியென்றால் அவன் ஒருசாதிரையும் ஏற்படுத்திக் கொள்ளாதவனாதலின் வெறுமனே மறுமொழி கூறாமலிருப்பானான் தங்களுக்கு அப்புறப்பட்ட பராயன் பறையன் என்றுந் தாழ்ந்த சாதி என்றும் கூறி நசித்துவருவது சாதிபேதம் உள்ளோர் சுவாபம்.

இத்தகைய சாதிபேதமுள்ளோர் மத்தியில் வாசஞ்செய்யும் அறுபதுலட்சத்திற்கு மேற்பட்ட சாதிபேதமில்லாப் பூர்வ திராவிடக் குடிகளை கருணைதங்கிய பிரிட்டிஷ் ராஜாங்கத்தோரே கவனிக்காமல் விட்டுவிடுவதானால் தாய்தந்தையற்ற குழவிபோல் உண்ண அமுதுக்கும் புசிக்க வன்னத்திற்கும் அலைந்துமடிய வேண்டியதேயாம். லார்ட் மார்லியவர்கள் கனத்தின் பேரில்வளைவென்னும் பழமொழிக்கிணங்க கனவான்களுக்கே கனமளித்து ஏழைகளின் மீது இதக்கம் வைக்காத காரணம் விளங்கவில்லை.

'- 2:38; மார்ச் 3, 1909 -