பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112 / அயோத்திதாசர் சிந்தனைகள்


முறைப்பாடுகளுக்கும் உதவியாயிருந்து அவர்களெடுத்துள்ள முயற்சிக்கும் ஆதரவுபுரிவார்களென்று நம்புகிறோம்.

- 2:45; ஏப்ரல் 21, 1909 -


52. நமது கருணைதங்கிய பிரிட்டிஷ் ஆட்சியின் பிரபலம்

உலகத்தில் பற்பல நாடுகளை அரசாண்டுவரும் அரசர்களுக்குள் நம்மெய் ஆண்டு வரும் ஆங்கிலேய அரசாட்சியானது சகலதேச அரசர்களாலும், குடிகளாலும் புகழ்ப்பெற்ற அரசாட்சியேயாம்.

அதாவது - தங்களுடைய அரசாட்சியையும் அநுபவ சுகங்களையும் தாங்களே அனுபவித்து சுகமடையாமல் சகலசாதி, சகலபாஷை, சகலமதஸ்தர்களுக்கும் கொடுத்து தங்கள் அரசாட்சியின் நீதியை அவர்களுஞ் செலுத்தவும் தாங்கள் அடைந்த சுகங்களை அவர்களும் அடையவும் பட்சபாதமின்றி ராட்சியபரிபாலனஞ் செய்துவருகிறார்கள்.

இத்தகைய நீதிநெறிவாய்த்த அரசாட்சியானது எத்திக்கிலுமில்லை என்பது நிட்சயம்.

இந்துதேசத்திலுள்ள பத்துகோடி ஜனங்களும் பிரிட்டிஷ் அரசாட்சியை விரும்பி அவர்கள் ஆட்சியில் வாழ்கவேண்டுமென்னும் விருப்பமுடையவர்களாய் இருப்பார்களாயின்.

பத்துபெயர் அவ்விருப்பத்திற்கிசையாமல் எங்களுக்கு பிரிட்டிஷ் ஆட்சி வேண்டாம் தாங்களே சுயவரசாட்சி செய்துக் கொள்ளுகிறோம் என்னும் கூச்சலிடுகின்றார்கள்.

இத்தகைய சுயராட்சியம் வேண்டுமென்று கூச்சலிடும் பத்து பெயர்களோ, பெரும்பாலும் பெரியசாதிகளென்று சொல்லும் சாதித்தலைவர்களேயாகும்.

அந்த சாதித்தலைவர்களுடையப் போதனைக்குள் அடங்கி அவர்களை சுவாமி சுவாமி என்று வணங்கிவரும் பத்தாயிரம் பெயர்கள் அப்பத்து சாதித்தலைவர்கள் வார்த்தைகளை நம்பிக் கொண்டு, அல்லாசாமி பண்டிகையில் ஒருவன் ஆலிஜூலா என்பானாயின் சகலசாதியோரும் அதன் பொருளறியாது ஆலிஜூலா என்பது (சில வரிகள் தெளிவில்லை). சாதிபேதமில்லாமல் வாழும் பேதை ஜனங்களின் நிலையற்ற வாழ்வையும் நாளுக்குநாள் கண்ணுற்று வரும் நமது கருணைதங்கிய ராஜாங்கத்தார் தங்களுடைய ஆட்சியை இன்னும் பலப்படுத்தி சகலசாதியோரும் சுகமடையவேண்டிய வழிகளைத் திரவாமலும், சாதிபேதமுள்ளோர் சுகம்பெற்றுவருவதையும், சாதி பேதமில்லாதோர் சுகமற்றுப் போவதையும் காணாமலும் பொதுவாக இந்துக்கள் என்று கூறி, இந்துக்களுக்கு அந்தஸ்தான உத்தியோகங்கள் கொடுக்கப்படும் (இரு வரிகள் தெளிவில்லை).

வாசஞ்செய்யும் குடிகளாகிய யூரோப்பியர், யூரோஷியர், பெளத்தர், இந்துக்கள், மகமதியர், பாரசீகர், சிக்ஸ், என்று பிரித்து அந்தந்த இராஜாங்க உத்தியோகசாலைகளில் உள்ள தொகைக்குத் தக்கவாறு இன்னின்ன வகுப்பார் இத்தனை பெயர்கள் இருக்கவேண்டும் என்னும் கண்டிப்பான உத்திரவை ஊர்ஜிதஞ்செய்தவுடன் அந்தஸ்தான உத்தியோக நியமனங்கள் யாவற்றையும் அரசாட்சி செய்யும் ஆங்கிலேயர்களைப்போல் சாதிபேதம், சமயபேத மற்றவர்களுக்கே கொடுத்துவரும்படியான சட்டதிட்டங்கள் வகுத்து விடுவார்களாயின் சகல குடிகளும் சிறப்புற்று சுகவாழ்க்கையைப் பெருவதுடன் பிரிட்டிஷ் ஆட்சியே நிலைக்கவேண்டுமென்னும் ஆனந்தக் கூத்தாடி நன்றியறிந்த வந்தனஞ்செலுத்தி இராஜவிசுவாசத்தில் என்றும் நிலைப்பார்கள்.

- 2:48; ஏப்ரல் 28, 1909 -


53. பறையனென்னும் மொழிமேலுள்ள பகையைப் பரக்கப்பாருங்கள்

பெளத்ததன்மத்திற்கும், பௌத்தர்களாம் மேன்மக்களுக்குஞ் சத்துருவாகத் தோன்றிய வேஷபிராமணர்கள் பௌத்தர்களைத் தாழ்த்தி பறையனென்று