பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரசியல் / 153


முகத்தினின்று பிறந்த கதைகளையும் ஓர் போக்கில் விட்டுவிட்டு ஆரியவர்த்தத்தினின்று இவ்விடம் சிலர் குடியேறியதாயும், ஐரோப்பா கண்டத்தில் சிலர் குடியேறியதாயும் கற்பனா கோலூன்றி வருகின்றார்கள்.

இத்தகைய சமயோசித கதைகளை உற்பத்தி செய்யும் காரணங்கள் யாதென்பீரேல், இத்தேசப் பூர்வக்குடிகள் யாவரும் விவேக மிகுதியால் ஒன்றுசேர்ந்துக் கொண்டு நாங்கள் எந்தசாதியோருக்குந் தாழ்ந்தவர்களுமன்று, உயர்ந்தவர்களுமன்றென்று கூறி தாங்கள் முன்னேறும் வழிகளைத் தேடுவார்களாயின் தாங்கள் இத்தேசத்து பிரம்மாவைச் சேர்ந்தவர்களில்லை. ஐரோப்பியரைச் சேர்ந்தவர்கள் என்று விலகிக்கொள்ளவும், ஐரோப்பியர் விழித்துக் கொண்டு நாங்களாரியரல்லவென்று இவர்களை விரட்டுவார்களாயின், இந்துக்களுடன் சேர்ந்துகொண்டு பிரம்ம வம்மிஷத்தோரென்று மாறுபடுத்திக் கொள்ளுவதற்கேயாம்.

இவர்கள் இத்தேசத்தில் குடியேறி இத்தேசத்தோரால் மிலேச்சர் ஆரியரென்று பெயர்பெற்று யாசக சீவனத்தால் வயிறுவளர்த்து சமயோசிதமாய் பிராமணவேஷம் எடுத்துக் கொண்டகாலம் ஆயிரம் வருடங்களுக்கு உட்பட்டதேயாகும்.

வேஷபிராமணர்கள் வேதம், சிற்சில வேஷபிராமணர்களாலெழுதி, சிற்சில ஐரோப்பிய துரைமக்களிடம் கொடுத்து அவர்களால் கிடைத்த வரையில் சேர்த்து புத்தகருபப்படுத்தி வேதமென்று வெளிவந்தகாலம் நூறுவருஷத்திற்கு உட்பட்டதேயாகும்.

வேஷபிராமணர்கள் வேதாந்தம், சங்கராச்சாரியாரால் உண்டு செய்ததென்று வெளிவந்தகாலம் தொண்ணூறு வருஷத்திற்கு உட்பட்டதேயாகும்.

அதாவது, இச்சங்கரவிஜயமானது பஞ்சாங்க குண்டையனுக்கும், மார்க்கசகாய ஆச்சாரிக்கும் சித்தூர் ஜில்லா அதவுலத் கோர்ட்டில் வழக்கு நடப்பதற்கு முன்பு தோன்றியிருக்குமாயின் சிவனென்னும் கடவுளே சங்கராச்சாரியாக பிராமணர் குலத்தில் அவதரித்துள்ளபடியால் மார்க்கசகாய வாச்சாரிகுலத்தினும் பஞ்சாங்க குண்டையன் குலமே விசேஷித்ததென்று கோர்ட்டில் நிரூபித்து ஜெயம் பெற்றிருப்பார்கள். அக்காலத்திலில்லாமல் பிற்காலத்தில் தோன்றியபடியால் வேஷபிராமணர் வேதாந்தம் தொண்ணூறு வருடத்திற்கு உட்பட தோன்றியதென்றே துணிந்து கூறியுள்ளோம்.

ஆயிரவருடங்களுக்குட்பட இத்தேசத்தில் குடியேறியுள்ள ஆரியர்களென்னும் மிலேச்சர்கள் இத்தேசப் பூர்வபௌத்தர்களுக்கு மித்திரபேதச் சத்துருக்களாகத் தோன்றி புத்ததன்மங்களைப் பலவகையாலும் பாழ்படுத்தி தேசச் சிறப்பையும் சீர்கெடுத்து மேன்மக்களாம் பௌத்தர்களையும் பறையர்கள் என்று தாழ்த்தி பல வகையாலும் நிலைகுலையச் செய்ததுமன்றி தன்னவரன்னியரென்னும் பட்சபாதமின்றி நீதிசெலுத்தும் பிரிட்டீஷ் ஆட்சியிலும் பூர்வ பௌத்தர்களை முன்னேறாவண்ணம் வேண்டிய தடைகளை செய்து கொண்டும் வருகின்றார்கள்.

ஆதலின் இச்சரித்திரத்தைக் கண்ணுறும் சத்திய தன்மப் பிரியர்களும் நீதிவழுவாக்கனவான்களும் இவ்வெழிய நிலையிலுள்ள பூர்வ பௌத்தர்கள் மீது இதக்கம் வைத்து இவர்களுக்குற்றுள்ள இடுக்கங்களை நீக்கி ஆதரிக்கும்படி வேண்டுகிறேன்.

- 2:48, மே 12, 1909 -


57. முநிசிபாலிட்டி என்றால் என்னை

முநிசிபாலிட்டி என்பது நகர சீர்திருத்த சங்கமென்றும், நகர சுகாதார சங்கமென்றுங் கூறப்படும்.

கவர்ன்மென்றாரின் அதிகாரமும் ஆலோசனையும் பெற்று இச்சங்கம் கூடியுள்ளபடியால் தக்க ஆதாரத்துடனும் நியாயவாயலாகவும் சேர்க்கப்பட்டுள்ளது.