154 / அயோத்திதாசர் சிந்தனைகள்
ரோடுகள் உண்டு செய்வதற்கும் வீதிகள் உண்டு செய்வதற்கும் ஆதாரம் இச்சங்கமே. ரோடுகளை சுத்திசெய்வதற்கும் ஆதாரம் இச்சங்கமே. வீதிகளுக்குக் கால்வாய்கள் உண்டுசெய்வதற்கும், செப்பனிட்டுவருவதற்கும் ஆதாரம் இச்சங்கமே. அசுத்த ஜலங்களைப்போக்கி சுத்தஜலங்களை நகரத்துள் கொண்டுவந்து சுகிக்கச் செய்வதற்கும் ஆதாரம் இச்சங்கமே. வீதிகள் தோரும் தீபங்களைவைத்து பயமற்று சுகமாக உலாவச்செய்வதற்கும் ஆதாரம் இச்சங்கமே. குடிகளின் பாதுகாப்புக்காக போலீசென்னும் காவற்காரரை நியமித்து கார்த்துவருதற்கும் ஆதாரம் இச்சங்கமே.
ஏழைகளுக்குண்டாகும் வியாதிகளைப் பரிகரிப்பதற்கும் அபாயத்தாலுண்டாகுங் காயங்களை ஆற்றி சுகப்படுத்துவதற்கும் நகர பலபக்கங்களிலும் வைத்தியசாலைகளை வைத்து ரட்சிப்பதற்கும் ஆதாரம் இச்சங்கமே.
சிறுவர்கள் கல்விவிருத்தியடைந்து விவேகமுண்டாவதற்காய் கிராமங்கள் தோரும் கலாசாலைகளை நாட்டிவருவதற்கும் ஆதாரம் இச்சங்கமே.
வியாபாரிகள் பலவகை சரக்குகளை கலப்புசெய்தும் பழைய பண்டங்களைத் தெரியாமல் வித்தும் குடிகளுக்கு வியாதிகளை உண்டு செய்வோரைக்கண்டு தெண்டிப்பதற்கும் ஆதாரம் இச்சங்கமே.
தொத்துவியாதிகள் ஒன்றுக்கொன்று தொடரவிடாமலும் தொடர்ந்த வியாதிகளைப் பரவவிடாமலும் பாதுகாத்து குடிகளுக்கு சுகங்கொடுப்பதற்கும் ஆதாரம் இச்சங்கமே.
ரோடுகளெங்கும் மரங்களை வைத்துப் பாதுகார்த்து குடிகளுக்கு நிழலளிக்கச் செய்வதற்கும், பொதுவாகிய தோட்டங்களை விருத்தி செய்து தங்கி சுகிப்பதற்கும் ஆதாரம் இச்சங்கமே.
- 3:1; சூன் 16, 1909 -
இத்தியாதி காரியங்களும் குடிகளின் பணங்களைக்கொண்டே குடிகளுக்கு வேண்டிய சுகங்களை ஏற்படுத்தி சகல சீர்திருத்தங்களையுஞ் செய்து வருகின்றார்கள்.
அத்தகைய சீர்திருத்த அதிபர்களோ ஒரு சபாநாயகர், ஒரு உப சபாநாயகர், அந்தந்த டிவிஷன் கமிஷனர்கள் மற்றுமுள்ளோரும் இருந்து காரியாதிகளை நடாத்திவருகின்றார்கள்.
நடாத்துங் காரியாதிகளில் குப்பைவரி, ரோட்டுவரி, மேட்டுவரி, நீர்வரி, விளக்குவரி முதலியவைகளை அந்தந்த வீட்டின் விஸ்தீர்ணங்களுக்கும், உபயோகத்திற்கும் அவரவர்கள் வருமானத்திற்கும் தக்கவாறு வரிகளை நியமித்து வசூல் செய்து சகல சிலவுகளுக்கும் நிறுவிவருகின்றார்கள்.
வரி நியமனங்கள் யாவற்றிலும் பிரசிடன்டும் கமிஷனர்களும் கலந்தே ஏற்படுத்துவது இயல்பாகும்.
சங்கத்தோர் ஏற்படுத்தியுள்ள நிபந்தனைகளை நடாத்திவருகிறவர்கள் மற்ற உத்தியோகஸ்தர்களாகும்.
அவ்வகை உத்தியோகஸ்தர்கள் யாவரும் பெரும்பாலும் சுதேசிகளாகவே விளங்குகின்றார்கள். அவ்வகை விளங்கினும் சுதேச குடிகளுக்குள்ள கஷ்டநஷ்டங்களை நன்காராய்ந்து வரிகளை விதிக்கவும் வசூல் செய்யவும் ஏற்படுவார்களாயின் அந்தந்த வரிவசூல்களுக்கு ஒவ்வோர் இன்ஸ்பெக்டர்களை ஏற்படுத்தவேண்டிய அவசரமிராது.
சரிவர நடாத்த வேண்டிய மேல்பார்வைகளுக்கு இன்ஸ்பெக்டர்களை நியமித்துக் குடிகளுடைய குறைகள் கடிதமூலமாக பிரசிடன்டுக்கு மேலுமேலும் போகிறபடியால் சுதேசிகள்மீது சுதேசிகளே அன்புபாராட்டாமல் செய்துவரும் செய்கைகளை பிரசிடன்டே அந்தந்த வீடுகளுக்கும் வீதிகளுக்கும் வந்து ஒவ்வொன்றையும் நேரில் பார்வையிட்டு உத்தியோகஸ்தர்கள் செயல்களையும் குடிகளின் குறைகளையும் தேறவிசாரித்துவருகின்றார்கள்.
அவற்றை பார்க்குங் குடிகளுள் பிரசிடென்டே நேரில் வந்து வரிகளை நியமிக்கின்றாரென்று வீண் பீதி அடைகின்றார்கள்.